தாய் அடிவயிற்றைப் பற்றிக் கொண்டு துடிப்பதைக் கண்டு கண் கலங்கினாள் சிறுமி கோகிலா.
"அம்மா நான் வேணா வெளியே நின்னு பார்த்துக்கறேன்... நீ உள்ளார போயிட்டு வா" கேட்டாள் கோகிலா.
"இல்லம்மா... இன்னும் கொஞ்ச நேரம் தாங்கிட்டா... இருட்டிடும்... அப்புறமா போய்க்கலாம்" என்றாள் தாய் அங்கம்மா.
விஷயம், வேறொன்றுமில்லை. அந்த ஏரியாவிலிருக்கும் பொதுக் கழிப்பிடத்தில் இரண்டு பெண்கள் கழிப்பிடம் உண்டு. ஆனால், அந்த இரண்டுக்கும் கதவுகள் இல்லை.
சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் சொல்லியாச்சு, அரசியல் அல்லக்கைகளிடமும் சொல்லியாச்சு. காது கொடுத்துக் கேட்பார்கள். "ரெண்டே நாள்ல போட்டுத் தர்றேன்!"னு அவங்களும் சொல்லுவாங்க... ஆனா வேலை நடக்காது.
கோகிலாவின் தாய் மட்டுமல்ல அந்த ஏரியா பெண்கள் அனைவருமே இரவு வரை காத்திருந்து விட்டு இருட்டிய பின் தான் தங்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க ஓடுவார்கள்.
கோகிலாவிற்குத் தன் தாயைப் பார்க்கப் பார்க்க அழுகையாய் வந்தது.
மறுநாள் பள்ளியில் சோகமாயிருந்த கோகிலாவை சக மாணவர்களும், மாணவிகளும் விசாரிக்க அவள் தன் தாய் பட்ட பாட்டைச் சொல்லி அழுதாள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு மாணவன் மெல்ல ஆரம்பித்தான். "இங்க பாரு கோகிலா... அவன் போட்டுத் தருவான்... இவன் போட்டுத்தருவான்"னு பார்த்திட்டிருந்தா நடக்காது... அதனால..."
"அதனால....?"
"நாம எல்லோரும் வீட்டிலிருந்து தெனமும் பாக்கெட் மணி வாங்கிட்டு வந்து... கண்டதை வாங்கித் தின்னுட்டிருக்கோம்... ஒரு... நாலு நாளைக்கு நாம எல்லோரும் வாயைக் கட்டிட்டு.. நம்மோட பாக்கெட் மணியைச் சேர்த்து... அதைக் கொண்டு போய் கதவு மாட்டற கார்ப்பெண்டர் கிட்டே குடுத்து கதவு மாட்டித் தரச் சொல்லிக் கேட்டா என்ன?"
எல்லோரும் அமைதி காக்க, அதே மாணவன் தொடர்ந்தான், "அது போதலைன்னா... அந்தக் கார்பெண்டர் கிட்டக் கடன் கேட்போம்... "ஒரு வாரம் கழிச்சுத் தர்றோம்"னு.. ஒத்துக்கிட்டா இதே மாதிரி இன்னொரு வாரம் தீனிகளைத் தியாகம் பண்ணிட்டு அந்தப் பணத்தையும் கொண்டு போய்க் குடுத்திடுவோம்"
அனைவரும் ஏற்றுக் கொண்டதோடு அப்போதே கையிலிருந்த காசு பணங்களைத் தர, ஐநூறு ரூபாய் சேர்ந்தது.
தன்னைத் தேடி வந்த அந்த மாணவக் கூட்டம் சொன்னதைக் கேட்டு வியந்து போனார் கார்ப்பெண்டர். "ச்சே... இதுகளுக்கு இருக்கற சமுதாய உணர்வு கூட நமக்கு இல்லையே?" என்று உள்ளுக்குள் நொந்து போனவர்.
"கண்ணுகளா... நீங்க எதுவும் குடுக்க வேணாம்... போங்க நான் ஃபிரியாவே ரெண்டு கதவுகளையும் ரெடி பண்ணித் தந்துடறேன்"
"இல்லங்க நீங்க இந்தக் காசை வாங்கிக்கங்க... மீதிய ஒரு வாரத்துல குடுக்கறோம்" குழந்தைகள் வற்புறுத்த,
"சரிப்பா... இதுவே போதும்... இதுக்கு மேலே எதுவும் தர வேணாம்... உங்க சின்ன மனசுக்குள்ளார இத்தனை சமுதாய உணர்வு இருக்கும் போது... ஏழு கழுதை வயசான எனக்கு அதுல பாதியாவது இருக்க வேணாமா... போங்க... போங்க... இன்னிக்கு சாயந்திரமே கதவு ரெடியாயிடும்"
அன்று மாலையே, ரெண்டு டாய்லெட் அறைக்கும் கதவு மாட்டப்பட,
"அப்பாடா... நம்ம பல வருசத்துக் கோரிக்கை இப்பத்தான் நிறைவேறியிருக்கு" அந்த ஏரியா பெண்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லிக் கொள்ள,
கோகிலா தன் தாயின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனாள்.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்