இளம்பெண் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிக்க முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இளம்பெண் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிக்க முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


 


 தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் முத்துராமலிங்கத் தேவர் தெருவில் வசித்து வருபவர் கருத்தப்பாண்டி. இவர் கயத்தாறு பஜாரில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி தனுசியா. நேற்று காலையில் கருத்தப்பாண்டி கடைக்கு சென்றுவிட்டார். பின்னர் தனது ஒரு வயது கைக்குழந்தையுடன் தனுசியா வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.


அப்போது அங்கு முகமூடி அணிந்த 2 பேர் திடீரென வந்துள்ளனர். அவர்கள் தனுசியாவின் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவியுள்ளனர். இதில் நிலை குலைந்த அவரது கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க சங்கிலியை ஒருவன் பறித்துள்ளான். மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டவாறு வாசல் கதவை சாத்திவிட்டு வீட்டிற்குள் ஓடினார். அப்போது தடுமாறி வீட்டிற்குள் விழுந்ததில் அவரும், குழந்தையும் காயமடைந்தனர். ஆனாலும் அவர் சுதாரித்து எழுந்துள்ளார்.


இதற்கிடையில் கதவு இடுக்கில் நகையை பறித்த கொள்ளையனின் கை சிக்கியது. இதில் அவனது விரல்கள் நசுங்கியதால், வழிப்பறி செய்த நகை நழுவி கீழே விழுந்துள்ளது. அந்த நகையை தனுசியா எடுத்து கொண்டு வீட்டிற்குள் கூச்சலிட்டவாறு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 கொள்ளையர்களும் வீட்டிலிருந்து வெளியே ஓடினர். சிறிது தூரத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கில் அந்த 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.


அப்போது அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்றனர். வீட்டில் காயத்துடன் இருந்த தனுசியாவையும,் குழந்தையையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 முகமூடி கொள்ளையரையும் தேடி வருகின்றனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு கயத்தாறு அருகில் உள்ள தெற்கு இலந்தைக்குளத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த பெண்ணிடம் 3½ சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுவரை அந்த கொள்ளையர் பிடிபடவில்லை. இந்த நிலையில் கயத்தாறு மையப்பகுதியில் உள்ள வீடுமுன்பு நடந்துள்ள இந்த துணிகர சம்பவம் இப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கயத்தாறு போலீசார் இப்பகுதியில் துணிகரமாக நடமாடி வரும் கொள்ளையர்களை கூண்டோடு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%