மயிலாடுதுறை, அக்.9-
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தால் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடம் இடிக்கப்படாது என தமிழக அரசு உறுதியளித்ததால் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக தருமபுரம் ஆதீன கர்த்தர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் 1951-ம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் சார்பில் இலவச மருத்துவமனை தொடங்கப்பட்டு, பின்னர் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அது மிகவும் சிதிலமடைந்ததால், ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பழைய மருத்துவமனை கட்டிடத்தை இடித்துவிட்டு, நகராட்சி அலுவலகம் கட்டப்போவதாக தெரிய வந்தது. . இதற்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் எதிர்ப்பு தெரிவித்தார். உயிர் போகும் வரை உண்ணாவிரதம் இருந்தாவது முன்னோர்கள் கட்டிய கட்டிடத்தை காப்போம் என அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்படட்டது. இதற்கு பாஜக ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து முதல்வர் நடவடிக்கையின்பேரில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் தொடர்பு கொண்டு கட்டிடம் இடிக்கப்படாது என உறுதியளித்தனர். கட்டிடம் இடிக்கப்படாது என நகராட்சி உறுதி அளித்தது.இதையடுத்து உண்ணாவிரத முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ஆதீன கட்டளை தம்பிரான் ஸ்ரீமத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் நேற்று கூறுகையில், இது அரசுக்கும், ஆதீனத்துக்கும் இடையேயான போராட்டம் அல்ல. இந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் மீண்டும் ஒப்படைத்தால், மகப்பேறு மருத்துவத்தை முதன்மையாகக் கொண்டு, 200 படுக்கைகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை கட்ட ஆதீனம் நடவடிக்கை மேற்கொள்ளும். மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான வேலையும் ஆதீனத்தில் நடந்து கொண்டுள்ளது. அதற்கு இந்த மருத்துவமனை பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?