உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!
தோல் மருத்துவரான தன்னுடைய மனைவியைக் கொலை செய்தக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டிருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேந்திர ரெட்டி (31), மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து 4 முதல் 5 பெண்களுக்கு, உனக்காகவே என் மனைவியைக் கொலை செய்தேன் என்ற தகவலை அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேந்திர ரெட்டி (31), தன்னுடைய மனைவியும் தோல் மருத்துவருமான கிருத்திகாவை (28) கொலை செய்த நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு, பல பெண்களுக்கு, உனக்காகவே எனது மனைவியைக் கொலை செய்தேன் என்று பணப் பரிமாற்றத்துக்கு உதவும் போன் பே மூலம் தகவல் அனுப்பியிருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
மகேந்திர ரெட்டியின் தகவல்கள் கிடைக்கப்பெற்றவர்களில் ஏற்கனவே மருத்துவத் துறையில் இருக்கும் ஒரு பெண்ணும் அடங்குவார் என்றும், அவர் ஏற்கனவே மகேந்திர ரெட்டியின் திருமணம் செய்துகொள்ளும் அழைப்பை நிராகரித்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
அண்மையில், கைது செய்யப்பட்ட மகேந்திர ரெட்டியின் செல்போனை பறிமுதல் செய்து, அதிலிருந்த தகவல்களை மீட்டபோது, காவல்துறைக்கு இந்த தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, தனது மனைவி இறந்த பிறகு, அவரை வைத்து தன்னுடைய பழைய தோழிகளிடம் புதிய உறவைப் புதுப்பிக்க முயன்றிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, பெங்களூரைச் சேர்ந்த இளம் மருத்துவர் கிருத்திகா, ஏப்ரல் 24ஆம் தேதி திடீரென மரணமடைந்தார். அவருக்கு இருந்த வயிறு சம்பந்தமான பிரச்னைக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கிருத்திகாவின் கணவர் மீது பெற்றோருக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால், அவரது சகோதரியும், மருத்துவருமான நிகிதா ரெட்டி, கிருத்திகாவின் உடல் கூராய்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, காவல்நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தார்.
இதன் அடிப்படையில், உடல் உறுப்புகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு, அதில்தான் அதுவும் ஆறு மாதங்களுக்குப்பிறகு வெளியான தடயவியல் ஆய்வு முடிவில்தான் கிருத்திகா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
தடயவியல் முடிவில், கிருத்திகா இயற்கையாக மரணமடையவில்லை. அது ஒரு கொலை. அவரது உடல் உறுப்புகளில் அனஸ்தீஸியா எனப்படும் மயக்க மருந்து கலந்திருந்தது. அதிகப்படியான மயக்க மருந்தால், அவரது நுரையீரல் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முழு காட்சியும் மாறியது. கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் தோல் மருத்துவராகப் பணியாற்றி வந்தார் கிருத்திகா. விரைவில் தனியாக தோல் மருத்துவமனையைத் திறக்கவிருந்த நிலையில்தான் கணவரால் கொலை செய்யப்பட்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. குற்றவாளி மகேந்திரா, அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். தன்னுடைய மருத்துவ அறிவைப் பயன்படுத்தி கிருத்திகாவைக் கொலை செய்திருக்கிறார்.
திருமணத்துக்கு முன்பே, கிருத்திகாவுக்கு இரைப்பைக் குடல் தொடர்பான பிரச்னை இருந்துள்ளதாகவும், இதனை மறைத்துத் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.