=============
இது என்ன வலி..
ஊசி குத்துவதுபோல்
உள்ளே பரவுகிறது..
முடிவானதுபோல ஏன்
இருக்க முடிவதில்லை..
கணம் ஒவ்வொன்றும்
கடரவே மறுக்கிறது..
என்ன பேசுகிறோம்
என்ன செய்கிறோம்
எதுவும் புரியவில்லை..
நினைவுகள் எங்கும்
நிறைந்தபடி என்
நெஞ்சை பிசைகிறாய் இறுக்கியபடி..
தீர்மானித்துவிடுகிறபடி
எதுவும் நடப்பதில்லை..
கைபேசியின் அழைப்புகளில்
விழிகள் தேடி
கடலுடைவதேன்..
நீ நிகழ்வுகளில் உலவுவதை
வாட்சப்
'ஆன்லைன்' மட்டுமே
வரமளிக்கிறது அவ்வப்போது..
அதிலும் நீ இருப்பதை தேடி
வரும்வரை காத்திருந்து
வந்தவுடன் குதூகலித்து..
அது கொஞ்சநேரம்
நீடிப்பதாயில்லை..
நரகங்களை மேம்படுத்தும்
என் இருப்பினை அறிந்தவுடன்
உன் கடைசி காட்சிப்படல்..
என் குறுஞ்செய்திகளின் ஏக்கங்களுக்கப்பால்
உன் மறுதலிப்பு
என்னை சிலுவைப்படுத்தும்..
வேடிக்கைக்குரிய சண்டைகளுக்கெல்லாமா
பேசாமல் இருப்போம்..
ஆமாம்..
ஒன்றுமில்லாத விசயங்களுக்காக
பிரிவு நிகழ்ந்துவிடுகிறது..
என் முரண்பாடான
அழுத்தங்களின் வலி
உன் மீது வடுக்களாவதை
நீ கொட்டித்தீர்க்கிறாய்..
இந்த கண்மூடித்தனமான
சுயநலம் மிகுந்த
எவருக்கும் பரிசளித்துவிடாத
உனது பேரன்பின்மீதான
தாளாத வெறி
உன்னை மூச்சடைக்கிறது..
விழிபிதுங்கி நீ தவிப்பதை
விலகி நின்று சொன்னபோதுதான்
ஏதோ புரிந்ததுபோல் இருக்கிறது..
விழிப்பு முதல்
உறக்கம் வரை
ஒவ்வொரு கணமும்
உன் பிரிவின் வலிகளை உச்சரிக்க..
வாழவும் முடியாது
சாகவும் இயலாது
உன் இன்மையின் ரணங்களை
தாங்க முடிவதில்லை..
இப்படித்தான் இருக்கும் நரகமென
இப்போதுதான் புரிகிறது..
ஒரு பார்வை பரிசளி
ஒரு வார்த்தை வரமளி..
உன் தென்படலுக்காக தவமிருக்கிறது..
சிலுவையடைந்த என் அலைபேசி..
இங்கு மூன்றாம் நாளென்பது
மூவாயிரம் யுகங்களாய்
மூச்சடைக்க..
மீள்தலுக்கு ஏங்குகிறது
மீண்டும் என் உயிர்த்தெழல்..!
ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?