உயிர்த்தெழுந்த காதல்

உயிர்த்தெழுந்த காதல்


  (ஒரு பக்கக் கதை)

----------------+---+------+------

அவர்கள் காதலித்தது ஊருக்கும் தெரியாது உலகத்துக்கும் தெரியாது. அவர்கள் இருவர் மட்டும் தங்களுக்குள் புதைத்து வைத்திருக்கும் வைரப் புதையல்.


காலம் கனியும் என்று காத்திருந்தார்கள். காலம் கரைந்ததே தவிரக் கனியவில்லை


வசந்த் சொன்னான். "என் அம்மா இப்ப இருக்கற நிலைமைல நான் என் கல்யாணத்தைப் பத்தி நினைக்கக் கூட முடியாது மீரா" 


அதை ஆமோதிப்பது போல் தலையசைத்த மீரா, "என் சூழ்நிலையும் அதேதான்... தங்கச்சிகளோட எதிர்காலமே என்னை நம்பித்தான் இருக்கு வசந்த்"


நீண்ட யோசிப்பிற்குப் பின் அவர்கள் ஒரே முடிவை எடுத்தார்கள்.

"தங்களைச் சார்ந்தோர்க்காக தங்கள் காதலையே தியாகம் செய்வதென்று"


அவர்களின் அந்தப் பிரிவு நாள் 

அதற்காகவே அமைந்தது போல்

மழை இல்லை. காற்று இல்லை.


ஆனால் இருவரின் மார்புக்குள்ளும் சூறாவளி.


அவர்கள் கைகள் தொட்டுக் கொள்ளவில்லை. ஏனெனில் தொடுதல் திரும்ப முடியாத ஆசையைக் உயிர்ப்பிக்குமாம்.


ஆண்டுகள் ஓடியது.


வசந்த் தன் அம்மாவை

தன் மடியில் வைத்தே இழந்தான்.

அவள் கடைசி மூச்சில் சொன்னது,

“உன் வாழ்க்கையை

நீ வாழ்ந்திருக்கணும் கண்ணா.”


அந்த வார்த்தை அவன் உள்ளத்தைச் சிதைத்தது.


மீரா தங்கைகளுக்கெல்லாம் கல்யாணம் செய்து வைத்தாள். 

அவள் தாய் ஒரு நாள் கேட்டாள்.

“நீ மட்டும் ஏண்டி கல்யாணம் செய்துக்கலை?”


அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அழுதாள்.


சில மாதங்களுக்குப் பிறகு, அதே கோவில். அதே மாலை நேரம்.


வசந்த் மீராவைக் கண்டான். அவளைப் பார்த்ததும் இதயம் கதறியது. குரல் உடைந்தது.


“நான் உன்னைப் பிரிந்த நாள் முதல்

ஒரு நாள் கூட நிம்மதியாய்த்

தூங்கவில்லை மீரா”


மீராவின் கண்களில் அழுகையும் மகிழ்ச்சியும் சேர்ந்தது.


“உண்மையென்ன தெரியுமா…வசந்த்?... நம்ம தியாகம் தான்

நம்ம காதலுக்கு உயிர் கொடுத்திருக்கு.”


அவன் மெதுவாகச் சொன்னான். 

“இப்பக் கூட தாமதமில்லை மீரா"


அவள் அவனது கையை

முதல் முறையாகத் தொட்டாள்.

அந்த தொடுதலில் பல ஆண்டுகளின் வலி கரைந்து.... மறைந்தது.


“நம்ம அப்போ பிரிந்தது பயத்தில் இல்லை மீரா... பொறுப்பின் காரணமாய்"


அவள் சொன்னாள். “இப்போ சேர்றது நாம சேருவது கூட ஆசையால் இல்லை... அன்பின் வீரியத்தால்!...அதுதான் உண்மை.”


கோவில் மணி ஒலித்தது.


அன்று காதல் மௌனமாக இருந்தது.

இன்று அது கண்ணீரோடு சிரித்தது.


(முற்றும்)


முகில் தினகரன்,

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%