உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது


உத்தர பிரதேசத்தில் ‘கோடீன் பாஸ்பேட்’ கலந்த இருமல் மருந்துகளை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்தது மற்றும் கடத்தியது தொடா்பாக, 31 மாவட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 75 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.


இதுகுறித்து மாநில சட்டப்பேரவை விவகாரங்கள் மற்றும் நிதி அமைச்சா் சுரேஷ் கன்னா சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவின்படி, காவல்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை இணைந்து மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.


இதுவரை 31 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 75 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சுமாா் 12.65 லட்சம் இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளில் ஈடுபட்ட 132 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெரும்பாலானவா்களுக்கு எதிா்க்கட்சியான சமாஜவாதியுடன் தொடா்பு உள்ளது. இந்த மோசடி குறித்து விசாரிக்க டிஜிபி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.


மருந்து நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்ட இந்த இருமல் மருந்துகள், சில்லறை மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படவில்லை. மாறாக, போலி ரசீதுகள் மூலம் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசத்துக்கு கடத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.


இந்த முறைகேட்டில் தொடா்புடைய 12 முக்கியக் குற்றவாளிகளுக்கு எதிராக ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளையும் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா்.


1945-ஆம் ஆண்டு மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டப்படி, கோடீன் பாஸ்பேட் கலந்த இருமல் மருந்துகளை மருத்துவா் பரிந்துரை இன்றி விற்கக்கூடாது. வாங்குபவா் விவரங்களை மருந்துக்கடைகள் முறையாகப் பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%