வேலுச்சாமிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லை. ஆனால் இன்று பைனான்ஸில் வாங்கிய கடனுக்காக மட்டும் பத்தாயிரம்
கட்ட வேண்டும். ஒவ்வொரு மாதமும் பைனான்ஸ் தவணை கட்டி முடிப்பதற்குள் உயிர் போய்
விடுகிறது.
மனைவி வனஜா சொன்ன பேச்சையும் மீறி தங்கை பானுமதிக்கு கடன் வாங்கிக்
கொடுத்தது இன்று
கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது.
ஓட்டல் கடை வைப்பதற்காக சிறு தொகையாக கேட்க ஆரம்பித்த
பானுமதி ஒழுங்காக பணத்தை
கட்டிக் கொண்டிருந்தாள்.
வெளியூரில் கணவன் சசியுடன் சேர்ந்து கடை நடத்திக் கொண்டிருந்த அவளுக்கு நல்ல வியாபாரம்.
வியாபாரத்தை மேலும் விரிவு படுத்துவதற்காக அதிகமான பணத்தை வேலுச்சாமியிடம் கேட்க
தங்கையின் மீது உயிராய் இருந்த
அவன் பைனான்ஸியரான ராகவனை அணுக, " வேலு! உன்னோட நேர்மையைப் பற்றி எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.
தங்கச்சிக்காக பணம் கேட்கிறே.
நாளைக்கு அவங்க கட்டாம இருந்துட்டா
நீதான் கட்ட வேண்டி வரும்.யோசனை பண்ணி கையெழுத்துப் போடு" என்றார்.
கடைசியில் அவர் சொன்னது மாதிரிதான் ஆயிற்று. தங்கையின் கணவன் சசி குடிப்பழக்கத்துக்கு ஆளாகி திடீரென்று இறந்து விட
ஓட்டல் தொழிலை இழுத்து மூட வேண்டியதாயிற்று. பைனான்ஸியர் ராகவனும் மற்றவர்களும் தொல்லை தர ஆரம்பித்தனர்.
வேலுச்சாமியும் அப்படி ஒன்றும்
வசதியானவன் அல்ல.பெரியவர்கள் சம்பாதித்து வைத்த வீடும் நல்ல பெயரும்
மட்டும்தான் இருந்தது.. தனியார் நிறுவனத்தில் சுமாரான சம்பளம்.
ராகவனிடம் மாதத் தவணையை
கட்ட முடியாமல் வேறொரு இடத்தில் வட்டிக்கு வாங்கி அதைக் கட்ட ஆரம்பித்து இன்று அதுவே
வளர்ந்து ஆலமரமாகி நிற்கிறது .
வனஜா தான் அந்த யோசனையைச் சொன்னாள்.
"இனிமேலும் நீங்க இதே மாதிரி வாங்கிட்டு இருந்தீங்கன்னா
கடைசில தற்கொலை பண்ணிக்கிட்டு தான் சாகணும்.
பேசாம வந்த விலைக்கு இந்த வீட்டை வித்துட்டு எல்லா கடனையும் கட்டிடுங்க. வாடகை வீட்டுக்கு போயாவது நிம்மதியா இருப்போம்."என்று கண் கலங்கியவாறே கூறினாள் .
வீட்டை விற்று எல்லாக் கடனையும் கட்டி முடித்தாயிற்று.
முன்னோர்கள் வாழ்ந்த வீடு
கைவிட்டுப் போய்விட்டதே என்ற
கவலை வேலுச்சாமியை அரிக்கத் தொடங்கியது .
கவலையை மறக்கக் குடிக்க ஆரம்பித்தவன் முழு நேர குடிகாரனாகவே மாறிப் போனான் .
வேலுச்சாமியின் பழைய வீட்டுப் பக்கம் செல்லும் ஊர்க்காரர்கள் "எப்படி செல்வாக்கா இருந்த குடும்பம் .
இந்த வேலுச் சாமியோட குடிப்பழக்கத்தால இந்த மாதிரி நிலைமைக்கு ஆயிடுச்சே!" என்று வருத்தப்பட்டு வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டே சென்றார்கள்.
மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903