ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இந்திய அணி தற்போது அதன் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 30) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ள இந்திய வீராங்கனைகள் ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 34 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். மூன்றாவது போட்டியில் 42 பந்துகளில் 79 ரன்களும், 4-வது போட்டியில் 46 பந்துகளில் 79 ரன்களும் அவர் எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இலங்கைக்கு எதிரான தொடக்கப் போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டாலும், நான்காவது போட்டியில் அதிரடியாக 80 ரன்கள் எடுத்து அசத்தினார். தரவரிசையில் அவர் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் சறுக்கி 10-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா முதலிடத்தில் உள்ளார். ரேணுகா சிங் தாக்குர் எட்டு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களான ஸ்ரீ சரணி மற்றும் வைஷ்ணவி சர்மாவும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஸ்ரீ சரணி 17 இடங்கள் முன்னேறி 52-வது இடத்திலும், வைஷ்ணவி சர்மா 390 இடங்கள் முன்னேறி 124-வது இடத்திலும் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?