ஐ.எஸ்.ஓ தரச்சான்றுக்காக நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படும் மதுரை காவல் நிலையங்கள்
Jan 03 2026
19
மதுரை,
மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களை ஐ.எஸ்.ஓ (ISO) தரச்சான்று பெறும் வகையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக காவல்துறையில் பொதுமக்கள் அச்சமின்றி வந்து செல்ல வேண்டும் என்ற நோக்கில், வரவேற்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டடம் மற்றும் ஆவணங்களை முறையாகப் பராமரித்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.எஸ்.ஓ தரச்சான்றுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மதுரை நகரில் அண்ணாநகர், கோ.புதூர், கூடல்புதூர், தெற்குவாசல், ஜெய்ஹிந்த்புரம், எஸ்.எஸ்.காலனி, கீரைத்துறை உள்ளிட்ட 10 காவல் நிலையங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நூலகம், விளையாட்டு மையம், உடற்பயிற்சிக் கூடம், கலந்தாய்வு கூடம், யோகா பயிற்சி மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தர்களுக்குத் தனி அறைகளும், ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கெனத் தனித்தனி சிறை அறைகளும் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
அண்ணா நகர் காவல் நிலையம்:
புதுப்பித்தல் பணிகள் முழுமையாக நிறைவடைந்த தெற்குவாசல் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களை, ஓய்வுபெற்ற டிஜிபி விஷ்வகர்மா மற்றும் ஐ.எஸ்.ஓ தரச்சான்று நிறுவன அதிகாரி கார்த்திக் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். மற்ற காவல் நிலையங்களையும் ஆய்வு செய்த பிறகு, அக்குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ தரச்சான்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "மதுரை மாநகரில் உள்ள 20-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில், கட்டமைப்பு வசதி நன்றாக உள்ள 10 நிலையங்கள் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. இதற்காக 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றன. இதில் தெற்குவாசல் காவல் நிலையம் மற்றவற்றை விடக் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதன் முகப்பு பகுதி கலை ஓவியங்களுடன் பொலிவாகக் காட்சி அளிக்கிறது. ஆய்வுக்குழு வழங்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் விரைவில் விருது கிடைக்கும்" என்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?