ஒசூர், நவ. 5–
ஒசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டதை கண்டித்து பெண் தொழிலாளிகள் விடிய விடிய போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து வடமாநில இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
ஒசூரில் உள்ள டாடா நிறுவனத்தில் பணியாற்றிவரும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட விடுதியில் குளியலறையில் ரகசிய கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தது பெண் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளம்பெண் தொழிலாளர்கள் விடுதி முன்பு நேற்று மாலை தொடங்கி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் சார் ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சமாதானம் செய்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் ரகசிய கேமரா அமைத்தவரை கைது செய்ய வேண்டும், விடுதியில் தங்களை கொடுமைப்படுத்தும் வார்டன்களை மாற்ற வேண்டும், வேறு ஏதேனும் இடங்களில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதா என விடுதி முழுவதும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதிகாலை நேரத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உத்தனப்பள்ளி ராயக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் நிறுவன பேருந்து மூலம் அழைத்துச் சென்று விடுதியில் விட்டுள்ளனர்.போலீசார் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என கூறியதன் அடிப்படையில், அதிகாலை 5 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனையடுத்து ரகசிய கேமரா வைத்ததாக வடமாநில பெண் தொழிலாளியான நீலா குமாரி (23) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட விடியோவை தனது ஆண்நண்பருக்கு நீலா குமாரி அனுப்பியதாகவும், அது சமூக வலைத்தளத்தில் பரவியதும் தெரிய வந்தது. இதனடிப்படையில்தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, விடுதியின் குளியலறைகளில் ரகசிய கேமராக்கள் ஏதேனும் இருக்கிறதா என மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனை நடத்தினர்.
பெண் தொழிலாளிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?