ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?


கடந்த மூன்று வருடங்களாகத் தான் உயிருக்கு உயிராய்க் காதலித்து வந்த கீதா, இன்று படு சீரியஸாய், " இங்க பாருங்க விஜய்... இன்னிக்கு நீங்க நம்ம காதல் விஷயத்தை உங்க வீட்ல பேசறீங்க!" என்றாள் கட்டளையாய்.


  "ஐயோ" விஜய் பயக்க,


  "டேய் தடியா... எங்க வீட்ல எனக்கு தீவிரமாக வரன் தேட ஆரம்பிச்சிட்டாங்கடா!...அதனாலதான் சொல்றேன்... நீ என்ன செய்வியோ.... ஏது செய்வியோ... எனக்குத் தெரியாது அடுத்த முகூர்த்தத்தில் நமக்கு கல்யாணம் ஆகணும்!"சொல்லி விட்டு வேக வேகமாய்ச் சென்று தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து பறந்தாள் கீதா.


அவளின் ஆவேசமும் ஆக்ரோஷமும் விஜய்யை உசுப்பி விட, அன்று இரவே வீட்டில் தன் காதலை ஓப்பன் செய்தான்.


அடுத்த மூன்று நாட்கள் வீட்டிற்குள் அமைதி நிலவியதே தவிர பெற்றோரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.


அதே போல் கீதாவிடமிருந்தும் கால் வரவில்லை.


விஜய்யும் 'அவர்களாகவே பேசட்டும்' என்று காத்திருந்தான்.


மூன்று தினங்களுக்குப் பிறகு, அவனது பெற்றோர்கள் கீதா வீட்டு முகவரியைத் தெரிந்து கொண்டு அவள் பெற்றோரையும் சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றனர்.


அவர்கள் வீடு பூட்டியிருக்க பக்கத்தில் விசாரித்த போது, "ஓ... பரந்தாமன் சார் வீடா,?.. சார்... அந்தப் பொண்ணு ஸ்கூட்டியில் இருந்து விழுந்து ஏகமாய் அடிபட்டு "கோமா" ஸ்டேஜ்க்கு போயிடுச்சு சார்!... இந்த ஊர் வைத்தியம் வேணாமுன்னு பெங்களூர் ராயல் ஹாஸ்பிடலுக்கு மகளைக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க சார்" என்ற தகவல் கிடைக்க,


அதிர்ந்து போயினர் விஜய்யின் பெற்றோர்.


  "இந்த விஷயம் விஜய்க்கு தெரியுமோ தெரியாதோ?" என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும் விதமாய்,

மகனிடம் நாசுக்காக விசாரித்தாள் அவன் தாய். 'என்னப்பா உன்னோட. ஆள் கிட்டப் பேசினியா?"


 "ம்ஹும்...உங்களோட சம்மதத்தை வாங்கிட்டுத்தான் அவளோட பேசறதுன்னு தீர்மானிச்சிருக்கேன்"


அதற்கு மேலும் அவனிடம் மறைப்பது சரியல்ல என்பதை உணர்ந்த விஜய்யின் தாய், மெல்ல நிதானமாய் ஆரம்பித்து, அவன் அதிர்ச்சிக்கு ஆளாகாத விதத்தில் நாசூக்காய்ச் சொல்லி முடித்தாள்.


தன் தாய் சொன்னதை முழுவதுமாய்க் கேட்டு முடித்த விஜய், ஒரு சிறிய யோசிப்பிற்குப் பின், "அம்மா... பெங்களூர் போகலாம்....உடனே கிளம்புங்க!" என்றான்.


அன்றிரவுப் பேருந்திலேயே கிளம்பினர்.


பெங்களூர். ராயல் ஹாஸ்பிடல்.


ஒரு வழியாக கீதா இருக்கும் அறையைக் கண்டுபிடித்து, அவள் தந்தை பரந்தாமனிடம் தங்கள் குழந்தைகளின் காதல் பற்றிச் சொல்ல,


மெல்லச் சிரித்து பரந்தாமன், "இட்ஸ் டூ லேட்!... அவளுக்கு தலையில் அடிபட்டு கோமாவுக்குள் புதைஞ்சிட்டா... சுயநினைவிற்கு வருவாளா... மாட்டாளா?ன்னு டாக்டர்களாலேயே உறுதி சொல்ல முடியலை... அதனால...."


  "அதனால.... "நீங்க அவளை மறந்துட்டு வேறொருத்தியைக் கட்டிக்கோ"ன்னு சொல்றீங்களா?... சொல்றீங்களா?" உச்சஸ்தாயில் கத்தினான் விஜய்.


சில நேரங்களில் கோபம் கூட நன்மையில் முடியும் என்பதை உண்மையாக்கும் விதமாய், அவன் கத்தல் அறைக்குள் கட்டிலில் படுத்திருந்த கீதாவின் காதுகளுக்குள் மின்சாரம் போலப் பாய மொத்த உடலும் லேசாய் துள்ள, மெல்லக்

கண் விழித்தாள்.


அருகிலிருந்த அவளது தாய், "என்னங்க... என்னங்க... டாக்டரைக் கூப்பிடுங்க... கீதா கண் திறந்துட்டா!" கூவினாள்.


அவசரமாய் வந்து சோதித்த டாக்டர் முகத்தில் மலர்ச்சி.


 "கவலையே படாதீங்க உங்க பொண்ணுக்கு சுயநினைவு வந்துருச்சு.... கோமாவிலிருந்து மீண்டுட்டா"


  "எப்படி... எப்படி டாக்டர்?" கீதாவின் தந்தை பரபரப்பாக கேட்டார்.


  "காதலனோட கத்தல் குரல் அவள் செவிக்குள் நுழைந்து... நாடி நரம்பு மொத்தத்திலும் பாய்ந்து அவளோட சுயநினைவை மீட்டுக் கொண்டு வந்திடுச்சு!... என்கிட்ட கேட்கறா... "விஜய் வந்திருக்கிறாரா?"ன்னு.. இது...இதுதாங்க உண்மைக் காதலின் சக்தி!" 


டாக்டர் சொன்னதைக் கேட்டதும் கீதாவைக் காண அவசர அவசரமாய் அறைக்குள் சென்றான் விஜய்.


(முற்றும்)



முகில் தினகரன் 

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%