பெங்களூரு: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முக்கிய அம்சமான பூமிக்கு திரும்பும் விண்கலனின் வேகத்தை குறைப்பதற்கான, 'டிராக் பாராசூட்' சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ அறிவித்தது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் என்ற திட்டத்தை இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்திற்காக நம் விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய நான்கு குரூப் கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
மேலும், விண்கலனை மேம்படுத்தும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. வீரர்கள் அமரும், 'க்ரூ மாட்யூல்' எனப்படும் விண்கலன் பூமிக்கு திரும்பி கடலின் மேற்பரப்பில் விழுந்து மிதப்பதற்கு வேகக் குறைப்பு அவசியம்.
இதற்காக மொத்தம் 10 'பாராசூட்'களை விண்கலனில் பொருத்த உள்ளனர். விண்கலன் பூமிக்கு திரும்பும் போது இவை நான்கு கட்டமாக செயல்படும். இதில், டிராக் பாராசூட்கள் குறித்த நேரத்தில் வெளியேறுவது விண்கலனை நிலை ப்படுத்தி வேகத்தைக் குறைக்க அவசியம்.
இதற்கான சோதனைகள் சண்டிகரில் உள்ள சோதனை தளத்தில் சமீபத்தில் நடத்தப்பட்டன. சோதனை தளத்தில் உள்ள ரயில் பாதையில் 600 கி.மீ., வேகத்தில் மாதிரி இயக்கப்பட்ட போது இரு டிராக் பாராசூட்கள் விரிந்து வேகத்தை கட்டுப்படுத்தின.
பாராசூட் வெளியேறும் நேரம், உறுதித்தன்மை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் வெற்றியடைந்ததாக இஸ்ரோ நேற்று அறிவித்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?