கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் 2028-ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம்
Aug 08 2025
27

சென்னை:
கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில், வரும் 2028-ம் ஆண்டுமுதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயிடம் இருக்கும் சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் கொள்கை ரீதியான ஒப்புதலை ஜூலை 31-ம் தேதி வழங்கியது.
விரைவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலமாக பறக்கும் ரயில் சேவையின் சொத்து, ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதன் பிறகு இந்த வழித்தடம் முழுமையாக மெட்ரோ ரயில் கட்டமைப்புக்கு மாற்றப்படவுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் போன்று ஏற்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பணி 2 மாதங்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, இந்த வழித்தடம் அடியோடு மாற்றப்பட உள்ளது.
மெட்ரோ ரயில் என்ன கட்டமைப்பில் இயங்கி வருகிறதோ அதேபோல ரயில் நிலையங்கள், ரயில் இயக்கம், சிக்னல், தண்டவாளம், தொழில்நுட்பம், பாதுகாவலர் என அனைத்தும் அமையும். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. வழித்தடம் ஒப்படைக்கப்பட்ட முதல் 2 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடத்தில் பறக்கும் ரயில்களே இயக்கப்படும்.
கட்டமைப்புகள் முழுமையாக மாற்றப்பட்ட பின்பு அதாவது 2028-ம் ஆண்டுமுதல் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரியில் உள்ள புறநகர் ரயில் பணிமனைக்கான இடம் மெட்ரோ ரயில்களை பராமரிப்பதற்கு ஏற்ப மாற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?