
அந்த தெருவில் இன்று சத்தமே இல்லை.ஒரே ஒரு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அது தீக்ஷா பாப்பாவின் அழுகைச் சத்தம்.
“ஜூலி… ஜூலி…”
சிறுமியின் குரல், வீட்டின் வாசலிலிருந்து தெருமுனை வரை ஒலித்தது.
நேற்று வரை அவள் பின்னாலேயே ஓடித் திரிந்த குட்டி நாய்
இன்று காணாமல் போய் விட்டிருந்தது.
ஜூலி வந்த முதல் நாளை தீக்ஷா மறக்கவில்லை. மழையில் நனைந்து நடுநடுங்கி நின்றிருந்த அந்தச் சின்ன உயிரை அவள் அப்பா தான் வீட்டுக்குக் கொண்டு வந்தார்.
கொண்டு வந்த அன்று, "இன்று ஒரு நாள் மட்டும் இருக்கட்டும்.. நாளை கொண்டு போய் எங்காவது விட்டு விடலாம்” என்றார்.
ஆனால் அந்தக் குட்டி நாயே தீக்ஷாவின் உலகமாகிப் போனதால் அமைதியானார்.
பள்ளியிலிருந்து வந்ததும்
முதலில் அவள் கண்கள் தேடுவது
ஜூலியின் வாலாட்டு வைபவத்தை.
எப்போதும் வாசல் கதவைச் சாத்தியே வைத்திருப்பாள். "எங்காச்சும் ஓடிப் போயிடுச்சுன்னா...'" என்பாள்.
இன்று… வாசல் திறந்திருக்கிறது.
ஜூலி இல்லை.
அம்மா சொன்னாள், ''தீக்ஷா அது எங்காவது ஓடிப் போயிருக்கும் விடு.”
அப்பா அமைதியாக இருந்தார்.
அந்த அமைதி தீக்ஷாவை இன்னும் பயமுறுத்தியது.
தெருவெங்கும் ஓடினாள். ஒவ்வொரு வீட்டிலும் கேட்டாள்.
“எங்க குட்டி நாய் பார்த்தீங்களா?”
அப்போதுதான் யாரோ சொன்னார்கள்,
“ரோட்ல ஒரு நாய் அடிபட்டுக் கிடக்குதாமே…”
அந்த ஒரு வாக்கியம்
தீக்ஷாவின் கண்ணீரை நிறுத்தியது.
அவளுக்குள் ஏதோ உடைந்து விழுந்தது.
மாலை வந்தது. வீட்டில் சாப்பாடு தயார். தீக்ஷா தட்டைக் கூடத் தொடவில்லை.
“ஜூலி திரும்பி வந்தால்தான் சாப்பிடுவேன்” என்று வாசலிலேயே உட்கார்ந்தாள்.
மெல்ல அவளருகில் வந்தமர்ந்தார் அவள் தந்தை கோபால்.
“தீக்ஷா… ஒரு உண்மை சொல்லுவேன் நீ கத்திக் களேபரம் பண்ணக் கூடாது.”
அவள் தலையை உயர்த்தினாள்.
அவள் கண்களில் குழந்தைத்தனம் இல்லை. ஒரு தாய் தெரிந்தாள்.
''தீக்ஷா... நேற்று ராத்திரி ரோட்டுல…”
அப்பாவின் குரல் உடைந்தது.
தீக்ஷா எதுவும் பேசவில்லை. மெல்ல எழுந்து, வீட்டுக்குள் சென்று
ஜூலிக்காக வைத்திருந்த சிறிய கிண்ணத்தை எடுத்தாள்.
அதைக் கொண்டு போய் வாசலில் வைத்தாள். "பரவாயில்லைங்க அப்பா… ஜூலி போனா என்ன...
இன்னொரு குட்டி நாய் வாங்கிக்கலாம்.”
அப்பா அதிர்ந்தார். அம்மா அழுதாள்.
தீக்ஷா தொடர்ந்தாள்.
" அப்பா... நீங்க அடிச்சுத் துரத்தியதால்தான்
ஜூலி ரோட்டுக்குப் போச்சு...
நான் பார்த்தேன்.”
நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தார் தந்தை.
அன்று இரவு தீக்ஷா அழவில்லை
முதன் முறையாக அவள் தந்தை
உடைந்து போய்க் கதறினார்.
(முற்றும்,)
முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?