கிண்டி முதியோர் நல மருத்துவமனையில் ‘நலமான பெண்கள்' மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியம் துவக்கினார்
கிண்டி முதியோர் நல மருத்துவமனையில் ‘நலமான பெண்கள்' மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியம் துவக்கினார்
ரூ.60 லட்சம் கருவிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்
சென்னை, அக்.1–
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில், “சர்வதேச முதியோர் தினம் 2025” நிகழ்ச்சியில், “நலமான பெண்கள் வளமான வாழ்வு” மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, ரூ.60 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
கடந்த 25.2.2024 அன்று கிண்டியில் 200 படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தொடங்கப்பட்ட 1.5 ஆண்டுகளில் தினந்தோறுமான புறநோயாளிகளின் எண்ணிக்கை 1000 பேருக்கும் மேல் பயன்பெற்று வருகிறார்கள். இதுவரை புறநோயாளிகள் 3,80,594 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். உள்நோயாளிகளாக 10,612 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 10.5% மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள்.
இன்று இந்த நிகழ்ச்சியின் மூலம் எண்டோஸ்கோப்பி, பல் மருத்துவ உபகரணங்கள், கண் மருத்துவ உபகரணங்கள் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் மிக விரைவில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. எலும்பின் திடத்தன்மை அறிய Dexa Scan வசதி அமைய உள்ளது.
இந்த மருத்துவமனையில் உள்ள இன்னொரு கூடுதல் சிறப்பு, வயது மூத்தவர்களுக்கு முதுநிலை பட்ட மேற்படிப்பு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதன் மூலம் 72 முதியோர் மருத்துவர்களை பெற்றிருக்கிறது. இந்த 1.5 ஆண்டுகளில் 28 முதியோர் மருத்துவர்களை உருவாக்கி கொண்டிருக்கும் நிலையில் பிறகு 100 முதியோர் நல மருத்துவர்கள் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் முதியோர்களுக்கு மருத்துவ சேவைகள் ஆற்றவிருக்கிறார்கள்.
இந்தியாவில் மிகப் பெரிய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் முதியோருக்கான நல மேற்படிப்பு என்பது இல்லை. முதுநிலை மேற்படிப்பு என்பது தமிழ்நாட்டில் மட்டுமே இருந்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மா.சுப்பிரமணியம் பதிலளித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 உயிர்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டது. 29.9.2025 அதிகாலை 2 மணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மதிக்கத்தக்க சகோதரி மரணமடைந்து விட்டார். அவரைப் பொறுத்தவரை கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டு வந்தவர். அவருக்கு 500 என்கின்ற வகையில் சர்க்கரை நோய் இருந்தது. அதுமட்டுமல்லாமல் நிறைய உடல் பாதிப்புகள் இருந்தது. வந்ததிலிருந்தே வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். அதிகாலையில் இறந்து விட்டார். இவர் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் உயிரிழந்தவர். மீதமிருந்த 40 பேர் இறந்த நிலையிலேயே சடலங்களாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.
இன்று காலை வரை 53 பேர் அட்மிஷனலில் இருந்தார்கள். காலை 10 மணிக்கு மேல் நிறையே பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டார்கள். இன்று மாலைக்குள் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்புவார்கள். மேலும் 2 பேர் எலும்பு உடைந்து சிகிச்சைக்கு வந்திருந்தார்கள், அவர்களின் பாதிப்புகளை உணர்ந்து முதலமைச்சரின் உத்தரவின்படி, தனி சிறப்பு வாகனம் மூலம் மருத்துவர் குழுவுடன் மதுரை மருத்துவமனைக்கு மாற்றியிருக்கிறோம். அவர்களுக்கு மிகச் சிறப்பான வகையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பத்மஸ்ரீ வி.எஸ்.நடராசன், ஒன்றிய அரசு இணைச் செயலாளர் (AB-PMJAY) லலித்வத்வா, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தாராமன், தேசிய முதியோர் நல மருத்துவ மையம் இயக்குநர் தீபா, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் கூடுதல் இயக்குநர் மரு.லோகநாயகி மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.