குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை



பூஜ்: குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


குஜராத்தின் பூஜ் பகுதியில் தசரா பண்டிகையையொட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய அவர், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​லே முதல் சர் க்ரீக் வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இருப்பினும், பதிலடி நடவடிக்கையில், இந்தியப் படைகள் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை முழுமையாக உடைத்து தாக்கின. இதன் மூலமாக இந்தியப் படைகள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்த முடியும் என்ற செய்தியை உலகிற்கு அனுப்பியது.


போரை விரிவுபடுத்துவதும், போரைத் தொடங்குவதும் ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் அல்ல. இந்தியப் படைகள் ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து ராணுவ நோக்கங்களையும் வெற்றிகரமாக அடைந்துவிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது.


1965 போரில், இந்திய ராணுவம் லாகூரை அடையும் திறனை நிரூபித்தது. இன்று 2025-ல், நமது ராணுவத்தால் கராச்சி வரை செல்ல முடியும் என்பதை பாகிஸ்தானுக்கு நினைவூட்டியுள்ளோம். உங்கள் அனைவரின் துணிச்சலும், உங்கள் அனைவரின் வீரமும் இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் தொடர்ந்து பாதுகாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.


இந்தியாவின் வலிமையின் மூன்று தூண்கள். ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகும். இந்த மூன்று சேவைகளும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான், ஒவ்வொரு சவாலையும் நாம் திறம்பட எதிர்கொள்ள முடியும்.


சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தானின் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் வரலாறு மற்றும் புவியியல் இரண்டையும் மாற்றும் ஒரு வலுவான பதிலடி வழங்கப்படும். சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன போதிலும், சர் க்ரீக் பகுதியில் எல்லைப் பிரச்சினை தொடர்கிறது. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா பலமுறை முயற்சித்துள்ளது, ஆனால் பாகிஸ்தானின் நோக்கங்கள் குறைபாடுடையவை மற்றும் தெளிவற்றவை” என்று தெரிவித்தார்.


சர் க்ரீக் என்பது குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள 96 கி.மீ நீளமுள்ள ஒரு அலை முகத்துவார பகுதியாகும். கடல் எல்லைக் கோடுகள் குறித்து இரு தரப்பினரும் இடையே முரண்பாடுகள் நிலவுவதால், இது ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%