இரவு 12.10. உமன்ஸ் ஹாஸ்டலில் தனது அறையில் தனியாய் உறங்கிக் கொண்டிருந்தாள் சீதா.
"ஏய்... சீதா... எந்திரிடி..." தாயின் குரல் கேட்க, "பட்"டெனக் கண் விழித்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.
"இந்தக் குரல் அம்மாவோட குரலாச்சே?... அவங்க கார் விபத்துல இறந்து போய் கிட்டத்தட்ட ஒரு வருஷமாச்சே... அவங்க குரல் எப்படி?"
யோசித்தவாறே மீண்டும் உறக்கத்தில் புதைய, "ஏய்... சீதா... மொபைல் சார்ஜ் ஆயிடுச்சு... கழற்றி வைடி"
திடுக்கிட்டு எழுந்து போய்ப் பார்த்தாள். மொபைல் சார்ஜ் ஃபுல் ஆகியிருந்தது. உடனே அதைச் சார்ஜரிலிருந்து விடுவித்தாள்.
மறுநாள் அலுவலகத்தில் நேற்றிரவு நிகழ்ச்சியே நினைவில் நிரண்டியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும், தாயின் குரல் வந்து அவளை ஏதோவொரு விதத்தில் எச்சரித்துக் கொண்டேயிருந்தது.
ஒரு நாள், "ஏய் போய் கேஸைக் குளோஸ் பண்ணுடி" எனச் சொல்லும். ஓடிப் போய்ப் பார்த்தால் உண்மையிலேயே கேஸ் குளோஸ் பண்ணாமல்தான் இருக்கும்.
இன்னொரு நாள், "காலையில் ஆபீஸ் போகும் போதே பெட்ரோல் போட்டுக்கோ... டிரை ஆகிற கண்டிஷன்ல இருக்கு"எனக் கூறும்.
அதுவும் உண்மையாயிருக்கும்.
ஞாயிறு மதியம் துணிகளைத் துவைத்து, மொட்டை மாடியில் உலர வைத்து விட்டு வந்து படுத்தால், சிறிது நேரத்தில், "மழை வரப் போகுது போய்த் துணிமணிகளை எடுத்திட்டு வாடி" என்று தாயின் குரல் ஒலிக்கும்.
அந்தக் குரலுக்கு மதிப்பளித்து சீதா துணிகளை எடுத்து வருவாள். சில நிமிடங்களிலேயே கிளைமேட் மாறி மழை கொட்டும். இதே போல் நிகழ்வுகள் வாடிக்கையாகிப் போய் விட, ஒரு மனநல மருத்துவரை அணுகினாள்.
இவள் சொல்வதை எந்த வித குறுக்கீடும் இல்லாமல் கேட்டு முடித்த சைக்கியாட்ரிஸ்ட், தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்து விட்டு, அவளிடம் சில கேள்விகளைக் கேட்டார்.
அவள் பதிலை நன்கு பதித்துக் கொண்டு,"நான் ஒரு விஷயம் சொல்வேன்... நீ பயந்திடக் கூடாது" என்றார்.
"டாக்டர்..."
"யெஸ்... உனக்கு உண்மையில் எந்தக் குரலும் கேட்கலை... கேட்பது போல நீயே கற்பனை பண்ணிக்கறே... ஒரு பிரமை அவ்வளவுதான்"
"டாக்டர்"
"நீங்க சொன்ன கேஸ் சிலிண்டர்... மழை... துணிமணி... பெட்ரோல் ... எல்லாம் உனக்குள்ளேயே தோன்றிய செல்ஃப் அலர்ட்ஸ்... அதுகளை உன்னால் உணர முடிந்தும்... நீ அத்குக்கு இம்பார்ட்டெண்ட்ஸ் குடுக்கல... அதுவே அம்மா குரல்ல வந்தா உடனே ரீ-ஆக்ட் பண்ணிடறே... ஏன்னா சின்ன வயசிலிருந்தே நீ அம்மாவோட கண்டிப்புலதான் வளர்ந்திருக்கே... ஸோ... உன்னை நீ அலர்ட் பண்றதை விட, உங்கம்மா அலர்ட் பண்ணினாத்தான் உன் மனம் கேட்குது... கட்டுப்படுது..."
"அப்படின்னா குரல் கேட்கவேயில்லையா?. பிரமையா?" மலங்க மலங்க விழித்தபடி சீதா கேட்டாள்.
"டெஃபனட்லி... நீ வேணா ஒரு டெஸ்ட் பண்ணிப்பாரு இன்னிக்கு வாசற்கதவை சாத்தாமத் தூங்கு... எந்தவித அலர்ட்டும் வராது பாரு"
அன்றிரவு டாக்டர் சொன்னபடியே செய்தாள். எந்தக் குரலும் கேட்கவில்லை.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்