பள்ளி நோட்டீஸ் போர்டில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
என் பெயருக்குப் பக்கத்தில் இருந்த அந்த ஒரு வார்த்தை
என்னை நொந்து போகச் செய்தது.
"கே.சுந்தர் - தோல்வி"
நண்பர்கள் எல்லோரும் மதிப்பெண் பட்டியலைப் பார்த்து குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
சிலர் அம்மாவுக்கு போன் செய்து "குட் நியூஸ்'' சொன்னார்கள். சிலர் அப்பாவைத் தேடினார்கள்.
நான் மட்டும் என் அப்பாவைத் தவிர்த்தேன்.
அதற்கு வலுவான காரணமும் உண்டு.
என் அப்பா இந்தப் பள்ளியின் ஆசிரியர். மற்ற எல்லாருக்கும் சார்.
நேற்றிரவு நடந்த நிகழ்ச்சி என் மனத்திரையில் ஓடியது.
“அப்பா… இந்தத் தேர்வுதான் என் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகுது.... அதனால... நீங்க... இந்த ஒரு முறை மட்டும் உதவக் கூடாதா?”
அவர் என்னைப் பார்த்த பார்வையில்
கோபமும் இல்லை….கடுமையும் இல்லை… ஆனால் ஏதோவொன்று உறுதியாய் இருந்தது.
அலமாரியிலிருந்து அதை எடுத்தார்.
“இதுதான் கேள்வித்தாள்,” என்றார்.
என் இதயம் துடித்தது. என் கைகள் பரபரத்தன.
“ஆனா இதை நீ பார்க்கக் கூடாது,”
அவர் சொன்ன அடுத்த வார்த்தை
என் உள்ளத்தைக் கிழித்தது.
“என்னங்க அப்பா... நான் உங்க மகன் தானே?”
அவர் மெதுவாக சொன்னார்:
“சரி.... அதுக்காக?”
அதற்கு மேல் அவரிடம் பேசிப் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்த நான் அமைதியாய் நகர்ந்தேன்.
அன்றிரவு முழு ஈடுபாடின்றி ஏனோதானோவென்று படித்தேன்.
மறுநாள் தேர்வில், என்ன எழுதுகிறேன் என்பதே தெரியாமல் எதையோ எழுதித் தள்ளினேன்.
வீட்டுக்குள் வந்ததும்,
அப்பா வராண்டாவில் ஈஸி சேரில் அமர்ந்திருந்தார்.
நான் எதுவும் சொல்லவில்லை. அவரே கேட்டார்.
“முடிவுகள் வந்துடுச்சா?”
நான் தலையாட்டினேன்.
“என்னாச்சு?”
எனக்கு குரல் வரவில்லை. மதிப்பெண் தாளை நீட்டினேன்.
அதைத் திறந்து பார்த்தவர், நிதானமாய் மூடிவிட்டு, "நான் உன்னைத் தோற்கடிக்க நினைக்கலப்பா!... ஆனா சில விஷயங்கள் தோல்வி இல்லாமல் கற்றுக்க முடியாதுப்பா.”
அப்போதுதான் எனக்குப் புரிந்தது.
அவர் எனக்குத் கேள்வித்தாளைக் கொடுக்கவில்லை... அதனால் மதிப்பெண் பட்டியலில் நான் தோல்வி.... ஆனால் நேர்மைப் பட்டியலில், இன்று நான்தான் முதலிடம்.
(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?