கோயம்பேடு மார்க்கெட்டில் 25–ம் தேதி முதல் அக்டோபர் 5 வரை ஆயுதபூஜை சிறப்புச் சந்தை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை, செப் 23–
"கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை மறுநாள் (25–ந் தேதி) தொடங்கி அக்டோபர் 5–ந் தேதி வரை ஆயுதபூஜை சிறப்புச் சந்தை நடைபெறும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாவது பெருந்திட்ட வரைவுத் திட்டம் இந்தாண்டு இறுதி அல்லது 2026 தை மாதம் முதல் நாள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
கோயம்பேடு அங்காடி நிர்வாக அலுவலகத்தில், பி.கே.சேகர்பாபு அங்காடி நிர்வாகக் குழுவிற்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளச் சேவையை தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது தெரிவித்ததாவது:–
பணிகளை விரைவுப்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு துறைகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் செயல்படும் கோயம்பேடு அங்காடி நிர்வாகத்திற்கென புதிதாக இணையதள சேவை இன்றைக்கு துவக்கியுள்ளோம். இந்த இணையதளத்தின் வழியாக, 3000க்கும் மேற்பட்ட கடைகள் இந்த அமைப்பில் பராமரிப்பு கட்டணம், விலைகள் நிர்ணயம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.
கோயம்பேடு சந்தை பகுதியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பிலும், மெட்ரோ ரெயில் பணிகளையும் ஆயுத பூஜை திருவிழா காலத்தில் 5 நாட்கள் நிறுத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயம்பேடு சந்தையை மேம்படுத்த மழைநீர் கால்வாய், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்பேடுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் கழிவறைகளும் இலவசமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு சுத்தமான அங்காடியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். கடந்த காலத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக நிதி செலவிடப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, கோயம்பேடு அங்காடி முதன்மை நிர்வாக அலுவலர் மு.இந்துமதி, கண்காணிப்புப் பொறியாளர் ராஜன்பாபு, மாமன்ற உறுப்பினர் லோகு, வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் சிஎம்டிஏ அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.