கோவை ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை பூட்டை உடைக்காமல் கைவரிசை காட்டிய ‘பலே’ திருடர்கள்
Dec 28 2025
13
கோவை குனியமுத்தூரில் ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறை விடப்பட்டுள்ளதால், அவர் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் வீடு திரும்பிய ஜெபா மார்ட்டின், வீட்டின் பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் சோதனை செய்து பார்த்த போது, உள்ளே வைக்கப்பட்டிருந்த 103 சவரன் நகை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பணம் ரூ.10 ஆயிரம் ரொக்கமும் காணாமல் போய் உள்ளது.
உடனடியாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குனியமுத்தூர் போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தடயவியல் நிபுணர்கள், பீரோ மற்றும் கதவுகளில் பதிவாகியிருந்த கைரேகைகளைச் சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில், வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்படவில்லை. மர்ம நபர்கள் கள்ளச் சாவி உபயோகித்தோ அல்லது பூட்டைத் திறக்கும் நுட்பம் அறிந்தோ உள்ளே நுழைந்துள்ளனர். இதனால், ஜெபா மார்ட்டினின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான நபர்கள் அல்லது அவரது நடமாட்டத்தைக் கண்காணித்தவர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர்.
பட்டப்பகலில் அல்லது ஆள் இல்லாத நேரத்தில் 100 சவரனுக்கும் அதிகமான நகைகள் கொள்ளை போயிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது அக்கம் பக்கத்தினரிடமோ தகவல் தெரிவித்துச் செல்லுமாறு போலீசார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?