நீண்ட நேர காத்திருப்பிற்குப்பின் சகுந்தலாவின் ஊருக்கு செல்லும் கடைசி பஸ் வந்தது.
"அப்பாடா" என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அதில் ஏற ஓடினாள். ஆனால் பஸ் நிற்காமல் வேகமாய் சென்று மறைந்தது.
அழுகையே வந்தது சகுந்தலாவுக்கு.
"அடப்பாவமே!... கடைசி பஸ்ஸை விட்டுட்டேனே!... இனி என்ன பண்றது?... எப்படி ஊருக்குப் போவது?..." தன் சந்தேகக் கணவனை நினைத்துப் பயந்து நடுங்கினாள்.
அதே நேரம், தான் கொன்ற நபரைத் தன் காரின் பின் இருக்கையில் கிடத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தான் ரகு.
பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சிலரும் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து விட தனியே நின்றிருந்த சகுந்தலாவிற்கு அடிவயிற்றில் பயபந்து உருண்டது.
"இதுக்கு மேலேயும் யோசனை பண்ணிட்டிருந்தா.. வீடு போய்ச் சேர முடியாது... என் புருஷன் "ஏண்டி உங்கம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு உன் கள்ளக்காதலன் வீட்டுக்கு போனியா?"ன்னு கேட்டுக் கேட்டு என்னைக் கொன்னே போடுவான்!.. அதனால... எந்த வாகனம் வந்தாலும் அதை நிறுத்தி ஏறிட வேண்டியதுதான்" தீர்மானித்தாள்.
வேகமாய் காரைச் செலுத்திக் கொண்டிருந்த ரகு சாலைக்கு நடுவே ஒரு பெண் வந்து நின்று கையை அசைத்துக் காரை நிறுத்த, யோசித்தான்.
"யார் இவள்?... ஒருவேளை "ராத்திரி ராணி"யோ?... நான் வேற பின் சீட்ல பொணத்தைப் போட்டுட்டு வர்றேன்!... இப்ப என்ன பண்றது?.. வேகமா "விர்"ன்னு போயிட வேண்டியதுதான்!" முடிவு செய்தான்.
ஆனால், கார் அந்தப் பெண்ணை நெருங்கியதும் அவளது அப்பாவித்தனமான கிராமத்து முகத்தை பார்த்த ரகுவிற்கு அவள் மீது ஒரு நல்ல அபிப்பிராயமும், இரக்கமும் தோன்ற காரை நிறுத்தினான்.
"ஐயா... கடைசி பஸ்ஸைத் தவற விட்டுட்டேன்... ராத்திரி வீட்டுக்கு போகலைன்னா என் புருஷன் எனக்கு வேசி பட்டம் கட்டி ஒதுக்கியே வெச்சிடுவான்" கையெடுத்து கும்பிட்டாள் சகுந்தலா.
பின்புறம் திரும்பி பார்த்தான் ரகு.
சகுந்தலாவும் எட்டிப் பார்த்து விட்டு, "பெரியவர் உறங்கட்டும் நான் ஓரமா ஒட்டி உட்கார்ந்துக்கறேன்" என்றாள், உள்ளே கிடப்பது பிணம் என்று அறியாமல்.
ஒரு சிறிய யோசனைக்கு பின் ரகு சரியென்று தலையாட்ட உள்ளே வந்து அந்தப் பிணத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டாள் சகுந்தலா.
அமைதியான அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் தன் ஊரை அடைந்ததும் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய சகுந்தலா, "ரொம்ப நன்றி ஐயா!" சொல்லி விட்டுத் தன் வீட்டை நோக்கி வேக வேகமாக நடந்தாள்.
"வாடி...வா!.. வா உனக்காகத்தான் காத்திருந்தேன்!.. எவன்டி அவன்?... கார்ல கொண்டு வந்து விட்டுட்டு போறான் கள்ள புருஷன்?... பெரிய பணக்காரன் போலிருக்கு!" என்று ஆரம்பித்து இரவு முழுவதும் அவளை திட்டி தீர்த்து, உதைத்துச் சலித்தவன் அவனையுமறியாமல் அதிகாலை நேரத்தில் உறங்கிப் போனான் அவள் புருஷன்.
உறங்காமல் படுக்கையில் கிடந்த சகுந்தலா வெளியே மக்களின் ஆரவாரச் சத்தம் கேட்க, படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து பார்த்தாள்.
"ஏரியில் பொணம் மிதக்குதாம்!" சொல்லியபடியே ஓடியது கூட்டம்.
சகுந்தலாவும் ஓடினாள்.
கரையோரம் ஒதுங்கிக் கிடந்த அந்தப் பிணத்தை பார்த்ததும் அதிர்ந்தாள். "அட... ராத்திரி காரில் தூங்கிக் கொண்டு வந்த பெரியவர்... அப்படின்னா அவன் கொண்டு வந்தது பெரியவரின் பிணத்தையா?... நான் உட்கார்ந்து இருந்தது ஒரு பிணத்துக்கு பக்கத்திலேயே?.. என்னை வண்டியில் கூட்டிட்டு வந்து விட்டவன் ஒரு கொலைகாரனா?"
அப்போது கூட்டத்துக்கு முன்னால் வந்த இன்ஸ்பெக்டர், "யாரோ இந்தப் பெரியவரைக் கொன்று... காரில் எடுத்து வந்து ஏரில போட்டிருக்காங்க.. இந்த ஊர்க்காரங்க யாராவது கார் நெம்பரையோ... காரில் வந்த ஆளையோ பார்த்திருந்தா என் கூட ஸ்டேஷனுக்கு வந்து அடையாளம் சொல்லுங்க" என்றார்.
"கொலைகாரனா இருந்தாலும் நடுரோட்டில் அந்த ராத்திரி நேரத்தில் தனியான நிற்கும் ஒரு பெண்ணான என்னை பார்த்ததும் என் மேல் இரக்கம் கொண்டு என்னைக் கூட்டி வந்து என் வீட்டு வரைக்கும் இறக்கி விட்டுட்டுப் போயிருக்கும் அவன் நல்லவன்!.. அவன் மேலே சந்தேகப்பட்டு ராத்திரி முழுவதும் என்னை அடித்து உதைத்து என் மனசைக் கொன்ற என் புருஷன்தான் உண்மையிலேயே கொலைகாரன்!.. மனசைக் கொல்லும் செய்யும் கொலைகாரன்"
நிதானமாய் வீட்டை நோக்கித் திரும்பினாள்.
முற்றும்.
முகில் தினகரன்
கோயமுத்தூர்.