சனிக்கிழமை கூட்டம் வைத்ததால்தான் இத்தனை பேர் உயிரிழந்தனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
கரூர்: "விஜய் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில்தான் தான் பேசுகிறார். அப்படியானால் 20 ஆயிரம், 30 ஆயிரம் பேர் வரத்தான் செய்வார்கள். அதுவும் வாரக்கடைசியில்தான் கூட்டம் வைக்கிறீர்கள். சனிக்கிழமை என்பதால் குழந்தைகள், பள்ளி சிறார்கள், பெண்கள் வருகிறார்கள். சனிக்கிழமை கூட்டம் வைத்ததால்தான் இத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்" என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். கரூர் மாவட்ட பாஜக சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கவுள்ளோம்.
நேற்று இச்சம்பவம் நடந்ததற்கு பல குளறுபடிகள் காரணம். இந்த கூட்டத்துக்கு சரியான இடத்தை வழங்காததால், முதல் குற்றச்சாட்டை மாநில அரசின்மீது வைக்கிறோம். சரியான இடமாக இருந்தால் அனுமதி வழங்கவேண்டும், இல்லையென்றால் வழங்கவே கூடாது. கரூரில் 500 போலீசார் பாதுகாப்பு வழங்கியதாக ஏடிஜிபி சொல்கிறார், அது தவறு. அவ்வளவு பேர் கூட்டத்தில் இல்லை. இவ்வளவு கூட்டம் கூடும் இடத்தில் போதிய அளவு போலீசார் இல்லை.
பொது இடத்தில் அனுமதி வழங்கும்போது பல விஷயங்களையும் பார்க்க வேண்டும். முக்கியமாக அசம்பாவிதம் ஏற்பட்டால் வெளியேறும் வழி இருக்க வேண்டும். இதனை கவனத்தில் கொள்ளாமல் அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர், எஸ்பி இருவரையும் பணியிடை நீக்கம் செய்யவேண்டும். எங்கள் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதனை நான் வரவேற்கிறேன்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். இந்த கூட்டத்தில் ஏதேனும் விஷமிகளின் செயல் உள்ளதா, மின்சாரம் தடை செய்யப்பட்டதா என விசாரிக்க வேண்டும். நீதிமன்றத்திலும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும்.
விஜய் மீதும் நான் குற்றச்சாட்டு வைக்கிறேன். சினிமா நடிகரை பார்க்க மக்கள் வரத்தான் செய்வார்கள். மற்ற அரசியல் கட்சிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பாயிண்ட் வைத்து, அங்கே மக்களை சந்திக்கிறார்கள். ஆனால், விஜய் மாவட்டத்துக்கே ஒரு இடத்தில் தான் பேசுகிறார். அப்படியானால் 20 ஆயிரம், 30 ஆயிரம் பேர் வரத்தான் செய்வார்கள். அதுவும் வாரக் கடைசியில் வைக்கிறீர்கள். சனிக்கிழமை என்பதால் குழந்தைகள், பள்ளி சிறார்கள், பெண்கள் வருகிறார்கள். சனிக்கிழமை கூட்டம் வைத்ததால்தான் இத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். விஜய் இதனை யோசிக்க வேண்டும்.