சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை குறி வைத்து பணம் மோசடி

சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை குறி வைத்து பணம் மோசடி



சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை குறி வைத்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான போலி இணையதளத்தை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர்.

திருவனந்தபுரம்,


சபரிமலை கோவிலில் அய்யப்ப பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க ஏராளமான அறைகள் உள்ளன. இவை அனைத்தும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. தரிசனத்திற்கு முன்பதிவு செய்வது போல், சபரிமலையில் ஓய்வெடுக்க அறைகளுக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில், சபரிமலையில் அறைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்காக போலி இணையதளம் உருவாக்கப்பட்டிருந்ததை பத்தனம்திட்டா சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர்.


மேலும், அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் முன்பதிவு செய்து ஏமாற்றம் அடைந்ததும் தெரியவந்தது. இணையதளம் போலியானது என்பதை அறிந்ததும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் பணத்தை அபகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து அந்த போலி இணையதளத்தை (sannidanamguesthouse.in) போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அரியானாவைச் சேர்ந்த ஹமீது என்பவருடைய செல்போன் எண் ஒன்றும், மற்றொரு எண் யாருடையது என்பதையும் தொழில்நுட்ப ரீதியாக விசாரித்து வருகின்றனர். மேலும், போலி வலைத்தளங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

சபரிமலையில் மேல்சாந்தி, தந்திரி சார்பில் நெய் விற்பனை செய்ய தடை

 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தந்திரி, மேல் சாந்திகள், மற்றும் பூசாரிகள் ரூ.100 கட்டணத்தில் பாக்கெட்டுகளில் பக்தர்களுக்கு நெய் விற்பனை செய்து வந்தனர்.


இதற்கு எதிராக திருவிதாங்கூர் தேவஸ்தான கமிஷனர் கேரள ஐகோர்ட்டு தேவஸ்தான அமர்வில் மனு செய்தார். அதில், தந்திரி, மேல்சாந்திகள் மற்றும் கீழ் சாந்திகள் சபரிமலையில் பக்தர்களுக்கு நெய் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு விற்பனை செய்ய தந்திரி, மேல்சாந்திகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


மனுவை விசாரித்த ஐகோர்ட்டு அமர்வு, நெய் விற்பனைக்கு தடை விதித்ததோடு தந்திரி, மேல்சாந்தி அறைகளில் விற்பனைக்காக பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டுள்ள நெய்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் நெய் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%