சாலைகளில் சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
Oct 18 2025
11

மதுரை, அக். 17–
தெருக்கள், சாலைகளில் இருந்த சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 1978-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக தெருக்கள், சாலைகளில் சாதி பெயர்கள் இருப்பதால் பிரச்சனைகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.
வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போதைய ஆளுங்கட்சி மக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது, பிளவு படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த அரசாணை பிறப்பித்து இருக்கிறது.இதன் மூலம் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைப்பதும்தான் நோக்கம். இந்த அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. இது சட்டவிரோதம்.எனவே குடியிருப்பு பகுதி சாலைகள் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா, சுமந்து குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்குவந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கார்த்திகேயன், வக்கீல்கள் கார்த்திகேய வெங்கடாஜலபதி சுப்பையா ஆகியோர் ஆஜராகி, நாட்டுக்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்தவர்களின் பெயர்களையும், ஆன்மிக தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் நோக்கத்தில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.
விசாரணை முடிவில் மேற்கண்ட அரசாணையின்படி செயல்படுத்துவது சம்பந்தமாக கள ஆய்வுநடத்தலாம். பெயர்களை நீக்கம் செய்வது உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?