ஜானகி அப்பாவின் செல்ல மகள். நன்றாக படித்தவள் .கல்லூரியில் முதலாவதாக வந்து முதுகலை பட்டம் பெற்றவள்.ஆதலால் அவளுக்கு பெரிய கம்பெனியில் வேலை நல்ல சம்பளத்துடன் கிடைத்தது. அவள் அப்பா நாராயணன் மிகுந்த பெருமையுடன் தன் சந்தோஷத்தை நண்பர்கள், உறவினர்கள் எல்லோரிடமும் ஜானகியை பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டார். நண்பர்களும் சந்தோஷப்பட்டனர். நல்ல விஷயம் தான் அடுத்தது என்ன பெண்ணுக்கு கல்யாணம் தானே? நாராயணா !எப்ப கல்யாணம் சாப்பாடு போட போற? என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள். நாராயணனும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து மூன்று மாதத்தில் திருமணமும் நடந்தது .மாப்பிள்ளை ஊர் மதுரை என்பதால் திருமணம் முடிந்து மதுரைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது ,ஆதலால் தொடர்ந்து அவளால் வேலைக்கு போக முடியவில்லை. தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தாள்.மதுரைக்கு போய் வேறு வேலை தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். மாமியார், மாமனார் உடன் கூட்டுக் குடித்தனம். மாமியார் ஜானகி முதலில் நன்றாக ஆசையுடன் கவனித்துக் கொண்டாள் .பிறகு மெல்ல மெல்ல அவருடைய சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. பையன் வீட்டில் இருக்கும்போது மருமகளை எந்த ஒரு வேலையும் செய்ய விடமாட்டாள். தானே எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். பையன் ஆபீசுக்கு சென்றவுடன் அப்படியே மாறி விடுவாள். மருமகளை வேலை செய்யச் சொல்லுவாள். ஜானகியும் எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தாள். மாலை 7:00 மணிக்கு பையன் வீட்டுக்கு வரும்போது தானே வந்து காபி கொடுப்பாள் .அவனுக்கு வேண்டிய எல்லா வேலையும் தானே செய்வாள் . ஜானகிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு மாதம் சென்றது. ஜானகி நான் மீண்டும் வேலைக்கு செல்கிறேன் இரண்டு கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கிறேன் என்று தன் கணவரிடம் சொன்னாள். இதை கேட்டுக் கொண்டே வந்த அவளது மாமியார் வேண்டாம் இப்பொழுது தான் உனக்கு திருமணம் ஆயிருக்கு கொஞ்ச நாள் ஜாலியா இரு அப்புறம் போகலாம் என்றாள். ரகுவும் நானே நல்ல சம்பளம் வாங்குகிறேன். நீ ஏன் வேலைக்கு போய் கஷ்டப்படணும். அம்மா கிட்ட சமையல் நல்லா கத்துக்கோ, வீட்டு வேலையும் செய்ய கத்துக்கோ அப்புறம் பார்க்கலாம் என்று சொன்னான் .அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை சரி என்று கூறிவிட்டாள். இரண்டு மாதம் சென்றது. ஜானகி எந்த வேலை செய்தாலும் அவள் மாமியார் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருந்தாள்.எல்லா வீட்டு வேலையும் ஜானகியை செய்யச் சொன்னாள். கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் இரவு தன் கணவரிடம் மாமியார் மங்கலத்தை பற்றி கூறினாள்.ரகு அதே ஒத்துக் கொள்ளவில்லை .தன் அம்மா நல்லவள் அவள் அப்படியெல்லாம் செய்ய மாட்டாள் என்றான் .அதற்கு ஜானகி நீங்கள் இருக்கும் போது ஒன்றும் சொல்ல மாட்டார்கள் ஆனால் நீங்கள் வீட்டிற்கு வெளியே சென்ற பிறகு சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள் என்றாள். அவனால் நம்ப முடியவில்லை நீ சும்மா என் அம்மா மீது குறை சொல்கிறாய் என்று கூறிவிட்டான் .மறுநாள் காலையில் அவன் அம்மாவிடம் நீ ஜானகியிடம் சண்டை போடுகிறாயா? என்று கேட்டான் .அதற்கு மங்கலம் இல்லவே இல்லை ...அவளை என் மகள் மாதிரி பார்த்துக் கொள்கிறேன் என்றாள். நீ தான் பார்க்கிறாயே நான் எப்படி அவளை கவனித்துக் கொள்கிறேன், என்று பயங்கரமாக நடித்தாள். அவனும் சரி என்று சொல்லிவிட்டு ஜானகியை சமாதானப்படுத்தி விட்டான் .ரகு வந்து தன்னிடம் இப்படி கேள்வி கேட்டதால் அவளுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. மறுநாளில் இருந்து ஜானகியை ஒரு வேலைக்காரி போல் நடத்த ஆரம்பித்தாள். மாமியாருக்கும், மருமகளுக்கும் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. ஜானகிக்கு ஒரே மன உளைச்சல் ஏற்பட்டது. ரகுவிடம் சொல்லுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை .என்ன செய்வது ?என்று யோசித்தாள் .மறுநாள் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு பக்கத்து தெருவில் உள்ள லைப்ரரிக்கு சென்று ஏதாவது புத்தகம் படித்தாலாவது பொழுது போகும். மாமியாரிடம் இருந்து கொஞ்ச நேரம் தப்பிக்கலாம் என்று கிளம்பினாள் .அங்கு சென்று பார்த்தபோது ஆச்சார்யா சாணக்கியரின் புத்தகம் கண்ணில் பட்டது .அதை எடுத்து படித்தாள். வீட்டுக்குள்ளேயே எதிரி இருந்தால் அவர்களை எப்படி தந்திரமாக ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் அறிவுரைகள் எழுதப்பட்டிருந்தது. அதை படித்தவுடன் அவளுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது .அந்த புத்தகத்தில் உள்ள முக்கியமான மூன்று அறிவுரைகள் அவளுக்கு ஆதரவு தரும் வகையில் இருந்தது .
1. எதிரிகள் உன் பலவீனத்தை வைத்து முதலில் உன்னை தாக்குகிறார்கள். உன் மனதை புண்படுத்துகிறார்கள்.உன்னை சண்டையிட தூண்டுகிறார்கள். ஏனென்றால் உன்னை கெட்டவளாக மற்றவரிடம் காட்டுவதற்காக.
2.நீ தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது. உன் பேச்சு எடுபடாத இடத்தில் தேவையில்லாமல் சண்டையும் போடக்கூடாது.
3 . உனக்கான காலம் வரும்வரை நீ பொறுமையாக இரு. எதிரியின் அகங்காரம் அதிகமாகும் போது அவர்களுடைய பலவீனத்தால் ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொள்வார்கள். அவர்களுடைய சுயரூபம் தெரியும். அப்போது மற்றவர்கள் முன் நடிப்பதை எல்லோரும் கண்டுபிடித்து விடுவார்கள் அதுவரை காத்திரு, என்று எழுதப்பட்டிருந்தது. அதை படித்தவுடன் பெருமூச்சு விட்டபடி.…. தானும் ஜெயித்து விடலாம் என்ற தன்னம்பிக்கையுடன் வீட்டிற்கு கிளம்பினாள் சிங்கப்பெண் ஜானகி.

எம் .எல் .பிரபா,
ஆதம்பாக்கம்,
சென்னை 88