சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் தகவல்
ராவல்பிண்டி: ‘‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் அடிலா சிறையில் உயிருடன் இருக்கிறார். அவரை வெளிநாடு தப்பிச் செல்லும்படி பாகிஸ்தான் அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது’’ என பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) கட்சியின் செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள சிறையில் கொலை செய்யப்பட்டார் என ஆப்கானிஸ்தானில் உள்ள சமூக ஊடகங்களில் கடந்த வாரம் தகவல் பரவியது.
சிறையில் உள்ள இம்ரான் கானை அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் சந்திக்க கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அவரது சகோதரிகள் சிறை வாசலில் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என அவரது மகன் காசிம் கான் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் பிடிஐ கட்சியின் செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன், இம்ரான் கான் குறித்து கூறியதாவது: இம்ரான் கான் அடிலா சிறையில் உயிரோடு இருப்பதாக எங்களுக்கு பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது. அவரை தனிமைச்சிறையில் அடைத்து வைத்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேறி, அவருக்கு பிடித்தமான இடத்தில் அமைதியாக இருக்கும்படி பாகிஸ்தான் அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு இம்ரான் கான் ஒப்புக் கொள்ள மாட்டார்.
இம்ரான் கானின் புகழை கண்டு பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. அதனால்தான் அவரது படம் மற்றும் வீடியோ வெளியிட அவர்கள் அனுமதிக்கவில்லை.
கடந்த ஒரு மாதமாக அவரை குடும்பத்தினர் மற்றும் கட்சி தலைவர்கள் சந்திக்க விடாமல் அவரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது துரஅதிர்ஷ்டம். இது மனித உரிமை மீறல். ஏதோ ஒரு விஷயத்துக்காக அவருக்கு பாகிஸ்தான் அரசு அழுத்தம் கொடுப்பதுபோல் தெரிகிறது.
இம்ரான் கான் சிறையில் இருந்தாலும், அவரது செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவரது பிடிஐ கட்சி பாகிஸ்தான் இளைஞர்களிடம் வலுவாக வேரூன்றியுள்ளது. அவரது கொள்கை பல தரப்பினரை ஈர்த்துள்ளது.
பிடிஐ கட்சிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இம்ரான் கான் சிறையில் இருக்கும் படம் வெளிவந்தால், அது மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவரது போட்டோவை வெளியிட பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை. இவ்வாறு குர்ராம் ஜீஷன் கூறினார்.