சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் கார்த்திகை தீபத்திருவிழா 2ம் நாள் உற்சவம்
கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் கோலாகலமாக நேற்று நடந்தது. தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தரிசனத்துக்காக அதிகாலையில் இருந்தே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது.
இந்நிலையில், தீபத்திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் காலை 11 மணி அளவில் தொடங்கியது. அதையொட்டி, ராஜகோபுரம் எதிரில் இருந்து மங்கள இசையும், சங்கொலியும் முழங்க, மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடியபடி சிவனடியார்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, தீபத்திருவிழா இரவு உற்சவம் இரவு 10 மணியளவில் விமரிசையாக நடந்தது. அதையொட்டி. திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், 3ம் பிரகாரத்தை வலம் வந்தனர்.
பின்னர், ராஜகோபுரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்திப் பெருக்குடன் முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, அதிர்வேட்டுகள் முழங்க மாட வீதியில் பவனிவந்து அருள்பாலித்தனர். சுவாமி திருவீதியுலாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் நள்ளிரவு வரை திண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கோயில் கலையரங்கத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 5ம் பிரகாரத்தில் உள்ள கல்லாண மண்டபத்தில் பக்தி சொற்பொழிவும் நடந்தது. மேலும், வண்ண மின் விளக்கு அலங்காரத்தில் திருக்கோயில் பிரகாசிக்கிறது. காணும் திசையெங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகாதீப பெருவிழாவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இப்போதே திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.