செஞ்சி அருகே நங்கியானந்தல் கிராமத்தில் 12ம் நூற்றாண்டு விஷ்ணு துர்க்கை சிற்பம்
விழுப்புரம், நவ.10-
செஞ்சி அருகே அமைந்துள்ளது நங்கியானந்தல் கிராமம். இப்பகுதியில் வசித்து வரும் ஆசிரியர் ப.சவுந்தரராஜன் அளித்தத் தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் களஆய்வு மேற்கொண்டார். அப்போது பழமைவாய்ந்த விஷ்ணு துர்க்கை மற்றும் நடுகல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுபற்றி வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
நங்கியானந்தல் புது ஏரிக்கு எதிரே பொன்னியம்மன் கோயில் கட்டுமானப் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இங்கு 2 சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. நீண்ட பலகைக் கல்லில் இந்தச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அழகிய ஆடை அணிகலன்களுடன் விஷ்ணு துர்க்கை நின்ற நிலையில் காட்சி தருகிறாள். இதன் காலம் கி.பி .12 அல்லது 13ஆம் நூற்றாண்டு ஆகும். இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜய வேணுகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மற்றொரு பலகைக் கல்லில் மிகுந்த கலைநயத்துடன் சண்டைக்குச் செல்லும் பாணியில் வீரனின் கால்கள் முன்னும் பின்னும் இருக்கும் வகையில் காட்டப்பட்டுள்ளன. வீரனின் வலது கரம் பெரிய கத்தியைப் போன்ற ஆயுதத்தைத் தாங்கியுள்ளது. இடது கரத்தில் நீண்ட வில் காணப்படுகிறது. முகத்தில் மீசை, அழகிய தலை அலங்காரம், அணிகலன்கள், இடைக்கச்சை ஆகியவை கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் போரிட்டு உயிர்நீத்த படைத்தலைவன் அல்லது வீரன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும். இதன் காலம் கி.பி.16ஆம் நூற்றாண்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஊராட்சிமன்றத் தலைவர் ர.வெங்கட சுப்ரமணியன், முன்னாள் தலைவர் இரா.குணசேகர், பூ.பெரியசாமி, இரா.நடராஜன், கோ.முருகன், க.நாராயணன், ம.சேகர், பெ.ராஜீவ்காந்தி, அ.மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?