சென்னையில் போதைப் பொருள் விற்பனை: லாட்ஜ் உரிமையாளர் உள்பட 7 பேர் கைது
Sep 30 2025
33

சென்னை: இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்களை குறி வைத்து போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற லாட்ஜ் உரிமையாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸார் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணிக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி போலீஸார் திருவல்லிக்கேணி, அவுலியா சாகிப் தெருவிலுள்ள ஒரு லாட்ஜில் கண்காணித்தனர். மேலும், அங்குள்ள அறையில் தங்கி இருந்த நபர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அறையில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு மெத்தம்பெட்டமைன், உயர் ரக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த சென்னை மண்ணடி முகமது அப்பாஸ் (31), அப்துல் கலாம் (20), ஷகில் அகமது (22), அண்ணா சாலை சையது நவீத் (28), திருவல்லிக்கேணி சிக்கந்தர் (42), மகேஷ் (31), ராமநாதபுரம் மாவட்டம் தாகிர் தைகா (43), இராமநாதபுரம் மாவட்டம் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமது அப்பாஸ், சையது நவீத், மகேஷ், அப்துல் கலாம், தாகிர் தைகா ஆகியோர் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருவதும், சிக்கந்தர் லாட்ஜின் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்களை குறி வைத்து அதிக விலை வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?