சென்னை, செப். 17–
திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரில் வசித்து வரும் செந்தில் என்பவர் திருவல்லிக்கேணி, டாக்டர் பெசன்ட் ரோட்டிலுள்ள ஆவின் பாலகத்திற்கு சென்று அங்கு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பால் வாங்கி வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றனர். இதே போல் திருவல்லிக்கேணி, நீலம் பாஷா தர்காபுரத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் திருவல்லிக்கேணி, வெங்கடாச்சலம் 3வது தெரு சந்திப்பு அருகே அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்று சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக செந்தில் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் ஐஸ் அவுஸ் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார்கள் கொடுத்ததின்பேரில், போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை செய்தும், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற செல்வகுமார் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரர்களின் 2 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட செல்வகுமார் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் பயணிகள் மீது வடமாநில ஆசாமி கொடூர தாக்குதல்: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
திருநெல்வேலி, செப். 17–
திருநெல்வேலி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு காத்திருந்த மூன்று பயணிகளை வடமாநில ஆசாமி ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியை சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டிதுரை (29) என்பவர் 4வது நடைமேடையில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில ஆசாமி ஒருவர் இரும்புக்கம்பியால் பாண்டிதுரையை தாக்கினார். தொடர்ந்து, அதே நடைமேடையில் நின்றிருந்த மேலும் 2 பேரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.
காயமடைந்த மூவரையும் திருநெல்வேலி சந்திப்பு ரெயில்வே போலீசார் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற 2 பேரின் விவரங்கள் தெரியவில்லை; அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தப்பிச்சென்ற வடமாநில ஆசாமியை தேடி வருகின்றனர்.