சென்னை கலைவாணர் அரங்கில் "தேசிய கைத்தறி கண்காட்சி 2025" - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
கைத்தறி துணி வகைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கு ஏதுவாக கைத்தறி துறையால் "தேசிய கைத்தறி கண்காட்சி 2025" நடக்கிறது.
சென்னை
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைப்படி கைத்தறி துணி வகைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கு ஏதுவாக கைத்தறி துறையால் "தேசிய கைத்தறி கண்காட்சி 2025" சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணியளவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சி வருகிற 17-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கைத்தறி தொழில், நாட்டின் கலாசாரம், பொருளாதாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக உள்ளது. இத்தொழில் குறிப்பாக கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இத்தொழில் பழமையான பாரம்பரியங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உலகளவில் அதன் தரம் மற்றும் கைவினைத் திறனுக்காக அங்கீகரிக்கப்பட்ட மிகுந்த அழகான கைத்தறி பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் புதுமையான கொள்கைகள் மூலம் இத்துறையை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.
இதன் ஓர் அங்கமாக கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்களின் அழகியல் வடிவமைப்புகள் மற்றும் அதன் வண்ணங்கள் பொதுமக்களை கவரும் வண்ணம் உள்ளதை அனைவரும் பார்வையிடவும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கைத்தறி துணி ரகங்களின் கண்கவரும் கண்காட்சியினை, மத்திய அரசின் நிதியுதவியுடன் கைத்தறி துறையால் “தேசிய கைத்தறி கண்காட்சி–2025” சென்னை கலைவாணர் அரங்கில் 03.10.2025 முதல் 17.10.2025 முடிய 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மேலும், இக்கண்காட்சியில் கைத்தறி நெசவாளர்களின் கைவண்ணங்களால் தனித்துவத்துடன் நெசவுசெய்யப்பட்ட பேஸ்டல் கலெக்ஷன்ஸ் (Pastel collection), பூம்பட்டு (Floral sarees), புதுமணப்பட்டு/ மாங்கல்யா கலெக்ஷன்ஸ் (New Wedding sarees collections), பட்டு நூல் டிசைனர் சேலைகள் (Silk Thread Designer sarees), கட்டம் பட்டு (Checked sarees), வெண்ணிலா கலெக்ஷன்ஸ் (Ivory sarees), அனுதினப்பட்டு (Daily wear silk), பருத்தி நூல் யோகா மேட் (cotton yoga mats), தர்ப்பை புல் யோகா மேட் (Tharpai pull yoga mat), தாய்-சேய் பெட்டகம் (Thai sei pettagam) போன்ற புதிய வடிவமைப்பு ரகங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறிமுகம் செய்து வைத்தார். இவ்விழாவின் முதல் விற்பனையினை இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் கைத்தறி துறையின் கீழ் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், வெளிமாநில தலைமை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுடன் மத்திய / மாநில சிறப்பு முகமை நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் பட்டு, திருபுவனம் பட்டு, ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், அருப்புக்கோட்டை, நெகமம், செட்டிநாடு, கோரா காட்டன், செடிபுட்டா, மதுரை சுங்குடி, கூரைநாடு, காஞ்சி காட்டன், பரமக்குடி புதினம் மற்றும் ஆர்கானிக், டை–டை சேலைகள், மென்பட்டு சேலைகள், சென்னிமலை பெட்சீட், கரூர் பெட்சீட் மற்றும் ஏற்றுமதி ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் வெளிமாநிலங்களின் பிரசித்தி பெற்ற பனாராஸ், டசர், பைத்தானி, போச்சம்பள்ளி, மைசூர் பட்டு சேலைகளும், பெங்கால் காட்டன், வெங்கடகிரி காட்டன், ஒடிசா இக்கட், சந்தேரி, தந்துஜா, மிருக்னாயினி சேலைகளும், ஜம்மு காஷ்மீர் சால்வைகளும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக பும்புகார் நிறுவனத்தின் அழகிய வேலைப்பாடு கொண்ட கலைநயமிக்க கைவினைப் பொருட்களும், தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சி 03.10.2025 முதல் 17.10.2025 முடிய தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூடடுறவு சங்கங்களின் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சிறப்புக் கழிவு வழங்கப்படும்.
இந்நிகழ்சியில் கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் கைத்தறி உபகரணங்கள், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த பிரமாண்டமான கண்காட்சியின் மூலம், தமிழ்நாட்டின் கைத்தறி பாரம்பரியத்தின் சிறப்பு, அதன் தனித்துவமான கலைநுணுக்கம் மற்றும் கலாசார வேலைப்பாடுகளை நேரில் கண்டு கைத்தறி ரகங்களை வாங்க பொதுமக்கள் திரளாக வருகை தருமாறு, தமிழ்நாடு அரசின் சார்பில் கைத்தறித் துறை அன்புடன் அழைக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.