சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு மையத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை,
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.10.2025) பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், பொதுமக்களிடமிருந்து சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி எண்ணிற்கு வரப்பெற்ற புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கணினிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், 1913 என்ற உதவி எண்ணிற்கு பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை நேரடியாக கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய எல்.ஈ.டி திரைகள் மூலமாக நகரின் பல்வேறு இடங்களில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுவதையும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 38.19 மி.மீட்டர் மழை பெய்துள்ளதையும், அதிகபட்சமாக எண்ணூரில் 136.50 மி.மீட்டர் பெய்துள்ளதையும், குறைந்தபட்சமாக அம்பத்தூரில் 0.30 மி.மீட்டர் மழை பெய்துள்ள விவரங்களையும்துணை முதல்-அமைச்சர் மின்னணு திரையில் பார்வையிட்டார். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு கால்வாய்களில் மழை நீர் தடையின்றி செல்வதையும், நேப்பியர் பாலம் அருகில் உள்ள முகத்துவாரத்தில் நீர் தடையின்றி கடலுக்கு செல்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளின் விவரங்கள் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
அதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் பதில் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 100 ஹெச்.பி திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகள், டிராக்டர் மேல் பொருத்தப்பட்ட 500 மோட்டார் பம்புகள் உள்பட பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
பல்வேறு கால்வாய்களில் பணிகள் மேற்கொள்வதற்காக 2 ஆம்பிபியன்கள், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினி ஆம்பிபியன்கள், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும், 489 மர அறுவை இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்காண்டுகளில் 1,217 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன, இதுவரை 1,136 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய்களும், 1 லட்சத்து 6 ஆயிரம் வண்டல் வடிகட்டி தொட்டிகளும் தூர்வாரப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 193 இடங்களில் நிவாரண மையங்களும், நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 150 மைய சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளன. மழைக்காலத்தினை முன்னிட்டு, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான 36 படகுகள் உள்பட 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. பருவமழை கால பணிகளில் மாநகராட்சியைச் சேர்ந்த அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2,149 களப்பணியாளர்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 299 தூர்வாரும் இயந்திரங்கள். 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள். 298 ஜெட்ராடிங் வாகனங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 45 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 642 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது, பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்வதுடன், புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்குமாறும், அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் வடகிழக்கு பருவமழை பணிகளை மேற்கொள்ளுமாறும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி உள்பட மாநகரட்சி அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.