சென்னை மாநகராட்சி 2-ம் கட்ட சிறப்பு முகாம் 2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி, ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டது

சென்னை மாநகராட்சி 2-ம் கட்ட சிறப்பு முகாம் 2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி, ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டது


சென்னை மாநகராட்சி சார்பில் 2–-ம் கட்டமாக நடந்த சிறப்பு முகாமில் 2 ஆயிரத்து 552 செல்லப் பிராணிகளுக்கு ‘மைக்ரோ சிப்', ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு உடலில் ‘மைக்ரோ சிப்' பொருத்தும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வருகிற 24-ந்தேதிக்குள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.


மேலும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதில் உரிமம் பெற ‘மைக்ரோ சிப்' மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை 6 மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் 3 நாட்கள் இலவசமாக சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது. அதன்படி கடந்த 9-ந்தேதி நடந்த முகாமில் 767 செல்லப்பிராணிகளுக்கு ‘மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டது.


இந்தநிலையில் நேற்று நடந்த 2-ம் கட்ட சிறப்பு முகாமில் செல்லப்பிராணிகளுடன் அதன் எஜமானர்கள் வந்து குவிந்தனர். இதனால் அந்த மையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இதனால் பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள முகாம் உள்பட முகாம்கள் நடந்த மையங்கள் இருந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


மாநகராட்சியின் இணைய தளத்தில் முன்பதிவு செய்திருந்தவர்கள், உடனடியாக டோக்கனை பெற்றுக்கொண்டு டாக்டர்களை சந்தித்து, தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்' பொருத்தினர். பலர் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து வாயில்லா ஜீவராசிகளுக்கு தடுப்பூசி மற்றும் ‘மைக்ரோ சிப்' பொருத்தி சென்றனர்.


திரு.வி.க. மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பில் உள்ள மையத்தில் மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் நேற்று 7 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,552 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் ‘மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை மொத்தம் 10 ஆயிரத்து 820 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 3-ம் கட்ட சிறப்புமுகாம் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, “ செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையத்தில் தினந்தோறும் தடுப்பூசி மற்றும் ‘மைக்ரோ சிப்' பொருத்தும் பணி நடைபெறுவது பற்றி எங்களுக்கு தெரியாது. எனவே வருகிற 24-ந்தேதிக்கு முன்பாக செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறவேண்டும் என்ற அறிவிப்பை சென்னை மாநகராட்சி தளர்த்தி கூடுதலாக கால அவகாசம் வழங்கவேண்டும்” என்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%