டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு ரயில் பாதை: 5 மில்லியன் டாலர் இந்திய நிதியுதவியில் சீரமைப்பு
ராமேசுவரம்: இலங்கையில் ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையை 5 மில்லியன் டாலர் இந்திய நிதியுதவியில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ‘டிட்வா’ புயல் இலங்கையைத் தாக்கியது. இதில் 643 பேர் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், அந்நாட்டில் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. ஏற்கெனவே, பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், இந்த ‘டிட்வா’ புயல் பேரிடரால் ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்த முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, உலக நாடுகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவைகளிடம் இருந்து இலங்கை கடன் உதவி கோரியது. அந்த வகையில், ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் சாகர் பந்த்’ என்ற திட்டத்தின்கீழ் நிவாரண உதவிகளைச் செய்தது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதுடன், அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்கவையும் அவர் சந்தித்தார்.
அதைத்தொடர்ந்து, ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியது. இது, ரூ.3,150 கோடி சலுகை கடன், ரூ.900 கோடி மானியங்கள் என்றும், இந்த நிதியுதவி புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையை மறுசீரமைப்பு செய்ய பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா அளித்த நிதியுதவியிலிருந்து 5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை மதிப்பில், இலங்கையின் வடக்கு ரயில் பாதை மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதனை இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா, இலங்கையின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டிட்வா புயலால் இலங்கை வடக்கு ரயில் பாதையின் சேதமடைந்த பகுதிகளை மீட்டெடுப்பதற்கு இந்திய நிதி உதவி உதவும். மேலும் இதன்மூலம் அத்யாவசிய போக்குவரத்து சேவைகள் மீட்டெடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.