டித்வா புயல் எதிரொலி: பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை
Nov 29 2025
22
ராமேசுவரம்: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘டித்வா’ புயலின் தாக்கத்தினால் ராமேசுவரம் தீவுப் பகுதியில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மண்டபம் மற்றும் ராமநாதபுரத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயலுக்கு டித்வா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் கரையைக் கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலினால் பாம்பன் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மேலும், காற்றுடன் இடைவிடாத மழையும் பெய்தது.
இந்நிலையில், பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, ராமேசுவரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ராமேசுவரம் வரும் பயணிகள் ரயில்கள் ராமநாதபுரம் வரையிலும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் மண்டபம் வரையிலும் இயக்கப்பட்டது.
நாளை (சனிக்கிழமை) மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் உச்சிப்புளி ரயில் நிலையம் வரையிலும் இயக்கப்படும்.
சென்னை - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரம் -ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், ராமநாதபுரம் ரயில் நிலையம் வரையிலும் இயக்கப்படும்.
ராமேசுவரம் - சென்னை வரையிலுமான போட் மேயில், புவனேஸ்வர் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மண்டபம் ரயில் நிலையம் வரையிலும் இயக்கப்படும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?