டிப்ஸ்

டிப்ஸ்


அந்த ஹோட்டலில் புதிதாக சர்வர் வேலைக்கு சேர்ந்திருந்த குமரன் அங்குள்ள சட்டதிட்டங்களைக் கேட்டுக் கோபமானான்.


 தன் கோபத்தை சக சர்வர் மூர்த்தியிடம் கொட்டினான்.


  'அண்ணே நானும் இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு ஹோட்டல்ல சர்வரா வேலை பார்த்திருக்கேன். அங்கெல்லாம் இந்த மாதிரி கண்டிஷன் கிடையாது!"


அமைதியாய் மேலும் கீழும் தலையாட்டினார் மூர்த்தி.


  'ஆறு மாசத்துக்கு ஒரு தடவை... ஒரு மாசம் லீவு கொடுப்பாங்களாம்... அப்பத்தான் வெளியூர்க்காரங்க ஊருக்கு போகணுமாம்' குமரன் சொல்ல.


  "பின்னே?... வெளியூர்க்காரங்க சொந்த ஊருக்கு போயி... சொந்த பந்தங்களைப் பார்த்ததும் ரெண்டு மூணு நாள் லீவை... ரெண்டு மூணு மாசம் ஆக்கிட்ட இங்க யாரு வேலை பார்க்கிறது?... அதுக்குத்தான் அப்படி ஒரு சட்டம்!" சிறிதும் கோபமில்லாமல் மூர்த்தி சாதாரணமாய்ச் சொல்ல, ஆச்சரியமானான் குமரன்.


  "என்னது இவரு தன்னுடைய கோபத்தை என்கிட்டக் காட்டுவார்னு பார்த்தா இவரு முதலாளிக்கு சப்போர்ட் பண்ற மாதிரியல்ல பேசுறார்!" என உள்ளுக்குள் நினைத்துக் கொண்ட குமரன், மேலும் தொடர்ந்தான்.


  "அட... அது கூட தேவலை... இன்னொரு கண்டிஷன் வச்சிருக்காங்களே அது மட்டும் என்னால் கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல!... இதுக்கு முன்னாடி நான் வேலை செஞ்ச ஹோட்டலிலெல்லாம் கஸ்டமர்ஸ் கொடுத்திருக்கிற டிப்ஸை நாங்களே வெச்சுக்குவோம்... சொல்லப் போனால் அதுதான் எங்க பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாயிருக்கும்!... ஆனா இங்கே... கஸ்டமர் குடுக்குற டிப்ஸையெல்லாம் அப்படியே கல்லால கொண்டு வந்து குடுத்திடணுமாம்... கொடுமை... கொடுமை!" பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான் குமரன்.


அப்போதும் அந்த மூர்த்தி ஒரு வார்த்தை கூட முதலாளியையோ... அந்தச் சட்டத்தையோ எதிர்த்து பேசாதிருக்க குமரனுக்குள் ஒரு சந்தேகம் கிளம்பியது, "ஒருவேளை இந்த மூர்த்தி ஓனருக்குச் சொந்தக்காரனா இருப்பானோ?.. நான்தான் விஷயம் தெரியாம இவன்கிட்ட உளறிட்டிருக்கேனோ?" லேசான அச்சம் உள்ளுக்குள் தோன்ற மூர்த்தியை முறைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தான் குமரன்.


ஊரில் உள்ள தன் குடும்பத்தின் ஏழ்மை நிலையையும், கணவரை இழந்த தன் தாய் இரண்டு பெண் பிள்ளைகளோடு கிராமத்தில் சிரமத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பதையும் நினைத்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு. அங்கேயே பணியை தொடர்ந்தான் குமரன்.


ஆறு மாதங்களுக்குப் பிறகு.


கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளி சுந்தர்ராஜ் குமரனை அழைத்தார்.


  "குமரா... நீ வேலைக்கு சேர்ந்த ஆறு மாசம் ஆச்சு இன்னும் ஒரு தடவை கூட ஊருக்கு போகல... அதனால நாளையிலிருந்து உனக்கு ஒரு மாசம் லீவு தரேன் ஊருக்குப் போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வா"


ஊருக்கு போகப் போகிறோம் என்கிற சந்தோஷம் அந்த வினாடியே அவனுக்குள் பரவ ஒரு மகிழ்ச்சிப்பூ அவன் முகத்தில் மலர்ந்தது.


  "சரிங்க முதலாளி" சொல்லி விட்டுத் திரும்பியவனை, "ஒரு நிமிஷம் நில்லு குமரா!" என்ற முதலாளி கீழே குனிந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் தந்து, "இதுல 40 ஆயிரம் ரூபாய் இருக்கு ஊருக்கு போகும் போது அம்மாவுக்கும், தங்கச்சிகளுக்கும் துணிமணி எடுத்துட்டுப் போ... ஸ்வீட்டெல்லாம் வாங்கிக் கொண்டு போய்க் கொடு"


  "நாப்பதாயிரமா?... ஐயோ முதலாளி இந்தப் பணத்தை நான் எப்படித்....?".


  "திருப்பிக் கொடுக்கிறது?"ன்னு தானே கேட்கறே?... நீ திருப்பித் தரவே வேண்டியதில்லை... ஏன்னா இது என்னோட பணமல்ல... உன் பணம்!... கஸ்டமர்ஸ் உங்களுக்குக் கொடுக்குற டிப்ஸை நான் வாங்கிக்கிறேன்.. அது ஏன் தெரியுமா?... நீ வெச்சிருந்தா ஏதாவது ஒரு செலவுதான் பண்ணிதிருப்பே... சேமிச்சு வைக்க மாட்டே!... அதனாலதான் அதை நான் வாங்கி உன் சார்பில் சேமித்து வைத்திருக்கிறேன் !.. அது கூட கொஞ்சம் என்னோட பணத்தையும் போட்டுத்தான்... இப்பத் தர்றேன் வாங்கிட்டு போ"


தன்னையும் அறியாமல் அவனுடைய கைகள் முதலாளியைக் கும்பிட்டன.


(முற்றும்)



முகில் தினகரன் 

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%