புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை (டிசம்பர் 1-ம் தேதி) தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 10 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் நோக்கில் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால், ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் கௌரவ் கோகோய், பிரமோத் திவாரி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற மரபுப்படி நடைபெறும் இக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கும் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைத்து ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளது.
எனினும் வாக்காளர் பட்டிய சிறப்பு தீவிர திருத்தம், டெல்லி கார் வெடிப்பு சம்பவம் மற்றும் வெளியுறவுக்கொள்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?