தமிழக அரசு மாவட்ட அளவிலான கார்பன் நீக்கத் திட்டம்

தமிழக அரசு மாவட்ட அளவிலான கார்பன் நீக்கத் திட்டம்

தமிழக அரசு மாவட்ட அளவிலான கார்பன் நீக்கத் திட்டங்களுடன் மாநில அளவிலான காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு திட்டத்தை மற்றொரு முன்னோடி முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை மற்றும் வசுதா அறக்கட்டளையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த முயற்சியானது, தரவு சார்ந்த, சமூகத்தால் வழிநடத்தப்படும் காலநிலை சவால்களுக்கான தீர்வுகளை வலுப்படுத்தி காலநிலை நிர்வாகத்தில் தமிழ்நாட்டை முன்னணியில் நிலைநிறுத்துகிறது.


இந்த திட்டத்தை நிதி, மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.


இது காலநிலைக் கொள்கை மட்டும் அல்ல; ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் பொருளாதாரக் கொள்கையாகும். இந்த கொள்கையானது, ஆயிரக்கணக்கான பசுமை வேலைகளை உருவாக்குவது மட்டுமின்றி மீள்தன்மை கொண்ட சமூகத்தையும் நமது தொழில்களையும் வலுப்படுத்துகிறது. மேலும், நமது இயற்கை பாரம்பரியத்தையும் பாதுகாக்கிறது. இதன்மூலம், கார்பன் நிகர பூஜ்ஜிய நிலையை எட்டுவதற்கு இந்தியா நாட்டினை தமிழ்நாடு இட்டு செல்லும் என்று அவர் நம்பிக்கையை விதைத்தார்.


மேலும் இந்த விழாவில், காலநிலை மாற்ற ஆட்சி மாற்றக்குழு உறுப்பினர்கள் மான்டெக் சிங் அலுவாலியா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜெயந்தி முரளி, வசுதா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசாமி, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ஜே.சிரு, நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் டி. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக, நீலகிரி, விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்நான்கு மாவட்டங்களும், தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (2022–23) 10.38% பங்களிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட ஆய்வுகள், இயற்கை எரிசக்தி உபயோகித்தல் மற்றும் பயண முறையில் மாற்றங்களை செயல்படுத்துவதன் மூலமாகவும், தொழில்துறை செயல்திறன் மற்றும் அவற்றுக்கான இயற்கை சார்ந்த தீர்வுகள் ஆகிய செயல்பாடுகளின் மூலம் 2050ம் ஆண்டுக்குள், திட்டமிடப்பட்ட கார்பன் உமிழ்வுகளில் 92% வரை குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றன.


மேலும், இந்த மாவட்டங்களில், வன மறுசீரமைப்பு, வேளாண்காடுகள், ஈரநிலப் பாதுகாப்பு மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை மறுசீரமைப்பதன் மூலம் 2050 ஆம் ஆண்டுக்குள் 2.97 மில்லியன் டன் அளவு கரியமிலவாயுவை நிகரான உமிழ்வுகளைப் மட்டுப்படுத்த இயலும்.


தமிழ்நாடு காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு என்பது உமிழ்வுகள், எரிசக்தி அமைப்புகள், காலநிலை பாதிப்புகள், நில பயன்பாட்டில் மாற்றம் மற்றும் மீள்தன்மை நடவடிக்கைகள் முழுவதும் காலநிலை தரவை ஒருங்கிணைக்கும் ஒரு மின் நுண்ணறிவுத் தளமாகும். இந்த தளம் ஆதார அடிப்படையிலான திட்டமிடல், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் வெளிப்படையான முன்னேற்ற அறிக்கை ஆகியவற்றைச் செயல்படுத்துவது மட்டுமின்றி, நிகர பூஜ்ஜியம் மற்றும் மீள்தன்மை கொண்ட வளர்ச்சி நோக்கிய மாநிலத்தின் பயணத்தை ஆதரிக்கிறது.


மாவட்ட அளவிலான காலநிலை நடவடிக்கை சிறப்பம்சங்களில் நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்தூர் செயல்பாட்டை விளக்கி னார். இந்நிகழ்வில், ‘தமிழ்நாட்டின் சாதனைகள், வாய்ப்புகள் மற்றும் மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விரிவுபடுத்துவதற்கான தொலைநோக்குப்பார்வை’ என்ற தலைப்பின் கீழ் ஒரு விரிவான விளக்கக்காட்சியை தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் நிர்வாக இயக்குனர் அனீஷ் சேகர் விளக்கினார். மேலும், ‘பசுமை போக்குவரத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ பற்றிய விரிவான விளக்கக்காட்சியானது சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் எடுத்துரைத்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%