தரணி போற்றும் தமிழர் திருநாள்

தரணி போற்றும் தமிழர் திருநாள்


பாவலர் கருமலைத்தமிழாழன்


ஊருக்கே உணவளிக்கும் உழவர் தம்மின்

 உழைப்புதனைப் போற்றுகின்ற உயர்ந்த நன்னாள்

தேருக்கே அச்சாணி போல மண்ணைத்

 தேனாக்கும் மாடுகளை வணங்கும் நன்னாள் !

ஏருக்குத் துணைநின்று பயிர்வி ளைத்தே

 ஏற்றத்தைத் தரும்கதிரை ஏத்தும் நன்னாள்

யாருக்கும் இல்லையெனச் சொல்லி டாமல்

 யாசிக்கும் முன்கொடுக்கும் விழாதான் பொங்கல் !


கல்மூன்றை அடுப்பாக்கிப் பானை வைத்துக்

 கறந்தபாலில் அரிசியொடு ஏலம் போட்டு

வெல்லமென வாழ்வெல்லாம் இனிக்கு மென்றும்

 வேதனைகள் போனதென முழக்க மிட்டே

எல்லோரும் கேளிரென ஒன்று சேர்ந்தே

 எழில்மஞ்சள் கரும்புதனை அருகி லிட்டுக்

கல்லுருவம் மதச்சாயல் ஏது மின்றிக்

 காண்கின்ற இயற்கையினைப் போற்றும் நன்னாள் !


மாவிலையின் தோரணங்கள் வீடு தோறும்

 மாடுகளின் கொம்பெல்லாம் வண்ணப் பூச்சு

காவிளைந்த மலர்களினைக் கொட்டி னாற்போல்

 கவின்கொஞ்சும் மாக்கோலம் வாசல் தோறும் !

கூவிகூவிப் பொங்கலோநற் பொங்க லென்று

 குதுகலமாய்ப் பாடியாடி மகிழும் தைநாள்

தாவிவரும் தென்றலெனத் தரணிக் கெல்லாம்

 தலைவிழாவாம்ம் பொங்கலெனும் தமிழர் திருநாள் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%