" முல்லை கிராமம் அந்த ஊரே விழாக்கோலம் பூண்டு மகிழ்ச்சியாக இருந்தது . ஊர் கோவில் திருவிழா இருபது ஆண்டுகள் கழித்து நடக்கும் பெருவிழா .
அனைவரும் வந்து நாற்காலியில் அமர்ந்து இருந்தனர். வீராசாமியும் அமர்ந்து இருந்தார் . எளிமையான உடை ஏழ்மையான நிலை .
தலைமை தாங்க வெளியூர் தனவான் பொன் முத்து வருவதாக ஏற்பாடு .
விழா மேடை கலை கட்டியது . சரியான நேரத்திற்கு மேடைக்கு வந்து அமர்ந்தார் பொன் முத்து . அவரை குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்க அழைத்தனர் விழாக் குழுவினர் .
மேடையை விட்டு கீழ் இறங்கி வீராசாமியை மேடைக்கு அழைத்து குத்து விளக்கு ஏற்றச் சொல்லி முதல் மரியாதை செய்து வரவேற்புரை கொடுக்கச் சொன்னார் பொன் முத்து .
வீராசாமி பெரிய ஜமீன்தார் சொத்து பத்து ஏராளம் . அப்போது பொன் முத்து வறுமையில் தவித்த ஒரு பள்ளி மாணவன்.
பொன் முத்துவின் அடக்கம் ஒழுக்கம் சிறந்த படிப்பு வீராசாமியை திரும்பி பார்க்க செய்தது .
பொன்முத்துவின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டு படிக்க வைத்தார். பிறகு கல்லூரியில் சேர்த்து உயர் கல்வியை அவனுக்கு கொடுத்தார்.
வெற்றிகரமாக படிப்பை முடித்து வெளியூர் பிறகு வெளிநாடு சென்று உழைத்து பெரிய கம்பெனியின் முதலாளியாக ஆகி விட்ட பொன் முத்து இப்போது தான் இருவது வருடம் கழித்து முல்லை கிராமத்திற்கு வருகிறான்.
வரும் வழியில் காரில் வீராசாமி ஐயாவை பற்றி விசாரித்தான் . தொடர் வெள்ளத்தால் பெரிய நஷ்ட்டம் ஏற்பட்டு இப்போது சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் விவசாய வேலைக்கு செல்வதாக விழாக் குழுவினர் சொன்னார்கள் .
மனக்காயம் அடைந்த பொன் முத்து கலங்கினான் . எதாவது ஒரு வகையில் உதவி செய்திட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே விழா மேடையில் ஏறினான் பொன் முத்து .
ஆனந்தக் கண்ணீர் துளிர்விட
அழகாக அடக்கமாக தெளிவாக துல்லியமாக பேசினார் வீராசாமி . பலத்த கைத்தட்டல் .
விழா சிறப்பாக முடிந்தது . பொன் முத்து வீராசாமியின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்து மதிய உணவும் சாப்பிட்டு அமர்ந்தான் .
வீராசாமியின் இழந்த சொத்துக்களை மீட்டுக் கொடுத்து வங்கி கணக்கில் பத்து லட்சம் பணமும் போட்டுவிட்டு , அந்த ஊர் கோவிலின் தர்ம கர்த்தாகவாக வீராசாமியை நியமித்தான் பொன்முத்து .
பேச வார்த்தைகள் எழவில்லை வீராசாமி குடும்பத்திற்கு, வாழ்த்தி பொன் முத்துவை வழி அனுப்பி வைத்தனர் .
அடுத்த நாள் முதல் கூனி குருகி வெளியில் சென்ற வீராசாமி தலை நிமிர்ந்து மகிழ்ச்சியாக ஊரில் நடந்து சென்றார் .
ஊர் மக்கள் ஒட்டு மொத்தமாக தர்மம் சாகாது என்று சொன்ன குரல்களின் வலிமையை உணர்ந்தவராய் பணிவும் எளிமையும் வெளிப்பட முன்னோக்கி நடந்தார் இன்னும் பல பொன் முத்துக்களை உருவாக்க வேண்டும் என்ற அசைக்க முடியாத எண்ணத்தோடு வீராசாமி .
- சீர்காழி. ஆர். சீதாராமன்.