தாமிரபரணியில் 30,000 கன அடி தண்ணீர் - ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி கடலுக்கு பாய்கிறது!
Nov 27 2025
26
தூத்துக்குடி: தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி 30 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளில் இருந்து தாமிரபரணியில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பல்வேறு காட்டாறுகளின் வெள்ளமும் கலப்பதால் தாமிரபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக் கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி நேற்று மாலை நிலவரப்படி 30 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டிருந்தது.
மேலும், ஏரல் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொடர் மழை காரணமாக அணை களில் இருந்து அதிகபடியான உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம் பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?