தாம்பரம், ஆவடி விமானப்படை நிலையங்கள் சார்பில் மாரத்தான் போட்டி

தாம்பரம், ஆவடி விமானப்படை நிலையங்கள் சார்பில் மாரத்தான் போட்டி



மாரத்தான் போட்டியில் சிறுவர்கள், பெண்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

சென்னை,


சென்னை தாம்பரம் மற்றும் ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை நிலையங்கள், இன்று "செக்கோன் நினைவு இந்திய விமானப்படை மாரத்தான்" நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தின. இந்தியா முழுவதும் உள்ள மேலும் 43 விமானப்படை நிலையங்களும் இந்நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் நடத்தின. விமானப்படையின் 93வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. "ஓடுவீர் - உயர்வீர் -உத்வேகம் பெறுவீர் " என்ற கருப்பொருளுடன் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


21 கிமீ, 10 கிமீ மற்றும் 5 கிமீ என மூன்று பிரிவுகளின் கீழ் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது. ஓட்டம் மற்றும் நடை ஆகியவை இதில் இடம்பெற்றன. இது உடல் தகுதி, ஒற்றுமை மற்றும் தேசம் குறித்த பெருமையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.


தாம்பரம் விமானப்படை நிலையத்தில், இந்த மாரத்தான் போட்டியை அதன் தலைவர் ஏர் கமடோர் தபன் சர்மா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொத்தம் 787 விமானப்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், சக பாதுகாப்புப்படைகளைச் சேர்ந்த வீரர்கள், துணை ராணுவப் படைகள் மற்றும் அனைத்து வயது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களும் விளையாட்டு வீரர்களும் மாரத்தானில் பங்கேற்று, இதர பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தினர்.


ஆவடியில், விமானப்படை நிலையத்தின் தலைவர் ஏர் கமடோர் பிரதீப் சர்மா மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெற்றியாளர்களை விமானப்படை குடும்ப நல சங்கத்தின் உள்ளூர் தலைவர் ஏர் கமடோர் பிரதீப் சர்மா, குரூப் கேப்டன் ரச்சனா சர்மா (ஓய்வு) ஆகியோர் கவுரவித்தனர். தஞ்சாவூர் மற்றும் சூலூரில் உள்ள விமானப்படை நிலையங்களும் மாரத்தான் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தன.


பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தவும், தேசிய ஒற்றுமை மற்றும் பெருமையை வளர்க்கவும் மாரத்தான் ஒரு தளமாக திகழ்ந்தது. 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது நாட்டின் மிக உயர்ந்த இராணுவ விருதான பரம் வீர் சக்ரா (பிவிசி) விருது பெற்ற ஒரே இந்திய விமானப்படை அதிகாரியான பிளையிங் ஆபீசர் நிர்மல் ஜித் சிங் செகோனின் தீரச்செயலை கௌரவிக்கும் விதமாக செகோன் இந்திய விமானப்படை மாரத்தான் நடத்தப்பட்டது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%