திட்டம்

திட்டம்


       செல்வி தானா இது? நம்பவே முடியவில்லை. உடம்பு வளைந்து வீட்டில் ஒரு வேலையும் செய்ய மாட்டாள். எந்த வேலையாக இருந்தாலும் பணிப் பெண்ணிடம் சொல்லிவிட்டு 'செல்' லை நோண்டிக் கொண்டிருப்பாள்.

அப்படிப்பட்டவள் இன்று வீட்டில் ஒட்டடை அடிப்பதையும் வீட்டு வாசலில் கோலம் போடுவதையும்

பார்த்து அசந்து நின்றாள் பிரபா.


      "என்ன செல்வி இது? என் கண்ணேயே என்னால நம்ப முடியல.ராதா அக்கா இன்னைக்கு வேலைக்கு வரலையா?" என்று கேட்டே விட்டாள் பிரபா.


   "இப்பத்தானே வந்துட்டு போனாங்க .ஏன் வீட்டு வேலை எல்லாம் நான் செய்யக்கூடாதா ? இன்னும் நான்அப்படியேதான் இருப்பேனா ..கொஞ்சம் கூட மாறி இருக்க மாட்டேனா?" என்று செல்வி சொல்லவும் "வீட்ல ஏதோ விசேஷம் போல இருக்கு ..அதான் நீயே துணிஞ்சு இறங்கிட்டே..கரெக்டா?" என்று கேட்டாள் பிரபா .


   "உண்மைதான்..!

என் மாமனார் ஊரில் இருந்து இன்னைக்கு வரார். கொஞ்ச நாள் இங்கு தங்கிட்டு கிளம்பிடுவார். அவருக்கு வீடு எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கணும். அதுக்காகத்தான் நானே எல்லாம் செய்ய ஆரம்பிச்சேன் " என்ற செல்வியிடம்

"ஆமா உனக்கு தான் உன் மாமனார் மாமியார்னா பிடிக்காதே! இப்ப என்ன இப்படி உருகறே?"என்று கேட்டாள் பிரபா .


    "போன வாரம் என்னோட அப்பா

அவரைப் பார்க்கிறதுக்காக அங்கே போயிருக்காரு. என் மாமியார் ராட்சசிகிட்டே மாட்டிகிட்டு அவர் படற அவஸ்தையை என்கிட்டே வந்து சொன்னார். ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்து தப்பிப் பிழைச்ச மனுஷன். இந்த வயசிலும் சமையல் எல்லாம் இவர்தான் செஞ்சாகணுமாம்.கடை கன்னிகளுக்கு போறது பேங்க் வேலையும் இவரேதான் செஞ்சாகணும் எப்படியாவது அவரை இங்கே வர வைக்கணும்னு எனக்கு உடம்பு சரியில்லைன்னு ஒரு பொய்யை சொன்னேன். என் மேல ஒரு தனிப்பட்ட பாசம் அவருக்கு எப்போதுமே உண்டு. என்னைப் பார்க்க என் மாமியார் எப்படியும் வரமாட்டாங்கன்னு எனக்கு தெரியும் .அந்த நல்ல மனுஷன் கொஞ்ச நாளாவது இங்கே நிம்மதியா இருந்துட்டு போகட்டும்கிறதுதான் என்னோட திட்டம் " என்று கலங்கிய கண்களுடன் சொன்ன செல்வியைப் பாசமாகப் பார்த்தாள் பிரபா .



மு.மதிவாணன் 

குபேந்திரன் நகர்

அரூர் 636903

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%