திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
Nov 27 2025
23
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல், தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் தாயார் ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் இருந்து பத்மாவதி தாயாருக்கு பட்டு சீர்வரிசைகளும், ரூ.1.31 கோடி மதிப்புள்ள 1.14 கிலோ எடையுள்ள தங்க அட்டிகை மற்றும் கமல ஹாரம் போன்ற ஆபரணங்கள் கொண்டு வரப்பட்டன. ஏழுமலையான் தனது மனைவியான பத்மாவதிக்கு பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சிக்கு இவற்றை சீர் வரிசையாக அனுப்பி வைப்பதாக ஐதீகம்.
இந்த சீர்வரிசைகள் நேற்று காலை திருச்சானூர் வந்து சேர்ந்ததும், தாயார், சக்கரத்தாழ்வார், விஸ்வகேசவர் ஆகியோர் கோயிலில் இருந்து அருகில் உள்ள பத்ம குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். அங்கு, உலர் பழங்கள், மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த மண்டபத்தில், சிறப்பு திருமஞ்சன சேவை நடந்தது. மதியம் 12.01 மணி முதல் 12.20 மணிக்குள் சக்கரத்தாழ்வாரின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதேசமயம் அங்கு குளத்தில் காத்திருந்த திரளான பக்தர்களும் புனித நீராடினர். அதன் பிறகு தாயார் முத்து பந்தல் பல்லக்கில் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று மாலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.
பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், சந்திரகிரி எம்எல்ஏ நானி, திருப்பதி எஸ்.பி. சுப்புராயுடு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை புஷ்ப யாகம் நடைபெறவுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?