திறமையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிமுக செய்யும்: இபிஎஸ்
Sep 14 2025
44

கோவை:
திறமையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிமுக செய்யும் என கோவையில் இன்று (செப்.13) நடந்த நிகழ்வில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
அதிமுக சார்பில், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கொடிசியா அருகேயுள்ள, தனியார் ஹோட்டல் வளாகத்தில் இன்று (செப்.13) நடந்தது. இந்நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார்.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முதல்கட்டமாக மேற்கண்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிக்கு உபகரணங்கள் வழங்கினார். கிரிக்கெட் கிளப் அணி வீரர்கள் அவற்றை பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பழனிசாமி பேசும்போது, ‘‘தமிழகத்தில் விளையாட்டு என்பது முக்கிய அங்கமாகும். உடல் நல மேம்படவும், மன அழுத்தம் குறையவும், உடலை காக்கவும் விளையாட்டு முக்கியமானதாகும்.
விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சோதனை வந்தாலும், அதை தாங்கும் மனநிலை உள்ளவர்கள். அதிமுக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உபகரணங்களும் கிடைக்க நாங்கள் பாடுபட்டோம். அதிமுக ஆட்சியில், விளையாட்டு வீரர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலை கிடைத்திட 3 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். மேலும், எங்களது ஆட்சியில் முதல்வர் கோப்பை அறிவிப்பை வெளியிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
சர்வதேச அளவுக்கு வீரர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள விளையாட்டு விடுதிகள் கட்டிக் கொடுத்தோம். ஊட்டசத்துக்கான தொகையை 3 மடங்காக உயர்த்தி வழங்கினோம். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது.
கிராமம் முதல் நகரம் வரை அந்தந்த பகுதிகளில் உள்ள வீரர்களுக்கு எந்தெந்த விளையாட்டு உபகரணங்கள் தேவையோ, அது வழங்கப்படும். அதிமுகவில் உள்ள விளையாட்டு அணியில் இளைஞர்கள் பங்கு பெற்று தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும். திறமையுள்ள வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிமுக செய்யும்.” என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?