தேர்தல் நெருக்கத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுகவின் கபட நாடகம்’ - தவெக
சென்னை: “வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும்.” என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகள் வரும் 4ம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்று (நவம்பர் 2) தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை நடிகர் விஜய்யின் தவெக புறக்கணித்துள்ளது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே, பிஹார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்து, அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம்.
அப்போது எச்சரித்தது போலவே பிஹாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
முதல் கட்டச் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்டத் திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்?
தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?
இந்த வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் வாயிலாக, பீகாரில் நடைபெற்றதைப் போல் தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது. எனவே சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து, ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.