நவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்தை புனரமைக்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14.03.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
சுமார் 1.63 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்தில், 26,346 சதுரடியில் தரைதளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய பல்பொருள் அங்காடி, 11 எண்ணிக்கையிலான கடைகள், அலுவலக அறை, மூத்த குடிமக்களுக்கான காத்திருப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயண சீட்டுகள் வழங்கும் அறை, உணவகங்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான தங்குமிடங்கள், மின்தூக்கி வசதிகள், ஏடிஎம் வசதிகள், 20 பஸ்கள் நிற்கும் வசதி கெண்ட 3 நடைமேடைகள், பஸ் வழித்தடங்களின் விபரங்கள் கொண்ட பதாகைகள், பயணிகள் இருக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 11.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். மேலும் பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 16 புதிய தாழ்தள பஸ்கள் மற்றும் 35 மகளிர் விடியல் திட்ட புதிய பஸ்கள் என மொத்தம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் அம்பத்தூர் பஸ் பணிமனை சார்பில் தினந்தோறும் 53 வழித்தடங்களில் 75 விடியல் பயணத் திட்ட பஸ்கள், 49 டீலக்ஸ் பஸ்கள், 15 சிறிய பஸ்கள் என மொத்தம் 139 பஸ்கள் மூலமாக 2,026 நடைகள் இயக்கபட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
அம்பத்தூர் பஸ் பணிமனை உள்பட அம்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும் மற்றும் அம்பத்தூர் பஸ் நிலையம் வழியாக செல்லும் மொத்தம் 81 வழித்தடங்களில் 287 பஸ்கள் மொத்தம் 3,126 நடைகள் பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு பேருந்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.