நினைந்தூட்டும் தாய்

நினைந்தூட்டும் தாய்



சன்னலைத் திறந்து திரைசீலையை விலக்கின நொடியில், எதிர்த்த வீட்டுச் சுற்றுச் சுவர் ஓரம், அவள் கண்ட காட்சி சாருலதாவுக்கு ஒரு இனம் புரியாத நெகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இரண்டும்; இளம் பழுப்பு நிறத்தில் இரண்டுமாக;நான்கு நாய் குட்டிகள்.

       மாலை வெயிலில் கடல் நுரையென அவைகளின் உடல் முடி,'மெத்து மெத்தென' வெல்வெட் துணிபோல், பளபளப்பாக மினுங்கிய குட்டிகளை கையில் எடுத்து கொஞ்ச ஆவல் மீதூர , வேகமாக இறங்கி ஓடி வந்தவளை, அருணன், ஏறிட்டுப் பார்த்து, 'மெதுவாகப் போ. எதற்கு இத்தனை வேகம்?' என்று சொல்லி அவள் கையைப் பிடித்து மெல்ல நடத்தினான். இல்லை; அருண்! அந்த குட்டிகள் என்னைக் கூப்பிடுவது போல் இருக்கிறது' என்று பதற்றமான குரலில் சொன்னவளின், உடல் நடுங்குவதை அருணன் உணர்ந்தான். இதற்குள்ளாகவே சாருலத, தன்னை அவன் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு, வீதியைக் கடக்க முற்பட்டவளை இடது பக்கமாய் வந்த காரோட்டி வசவு மழை பொழிந்ததும், வலது பக்கமாய் சைக்கிளில் வந்த விடலை பையன்,' அக்கா! பார்த்து வர மாட்டீங்களா?' என்றதும், அவள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

எதிர்த்த வீட்டு சுற்றுச்சுவர் பக்கம் போய், அந்த குட்டிகளுக்கு இடையே சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு; இரு கைகளையும் விரித்து, 'வாங்கடா!' என்று கூப்பிட்டாள்.

மெல்லிய குரலில் குழந்தைகள் ரகசியம் பேசுவது போல், அவைகள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தன.

திடீரென ஒரு முடிவுக்கு வந்தது போல் ஒருசேர அவைகள், பாய்ந்து வந்து அவள் மடியில் படுத்து கொஞ்சி விளையாட ஆரம்பித்தன. எதிர்த்த வீட்டு கதவு திறந்து, வெளியே வந்த முதியவர், ' ஒரு மாதம் முன் எங்கிருந்தோ வந்த நாய் பின்புற அவுட் ஹௌஸில் தங்கியிருந்தது.

மழை நாள் ஒன்றில் நான்கு குட்டிகளையும் ஈன்றுவிட்டு இங்கேயே தான் சுற்றிக் கொண்டு இருந்தது.நேற்றுக்காலை கார்ப்பரேஷன்காரன் அதை பிடிச்சுட்டு போக; இதுகள் போட்ட குரைத்தல் சத்தம் தாளாமல் விரட்டி விட்டேன்.

(13) திரும்ப இங்கேயே வந்து பதுங்கி கொண்டுவிட; இவைகளின் ரோதனை தாங்க முடியாமல்; இப்போதுதான் கார்ப்பரேஷனுக்கு ஃபோன் பண்ணிட்டு வரேன். அதற்கெல்லாம் எந்த ஒரு அவசியமும் இல்லை; சார். நான் கொண்டு போய் என் வீட்டில் வளர்த்துக் கொள்கிறேன்.

 பெற்ற குழந்தையை பறி கொடுத்துவிட்டு அவதியுறும் எனக்கு; நல்ல துணையாகவும், காயம் பட்ட மனதிற்கு அரு மருந்தாகவும் இருக்கும்.' என்றாள்

அருகில் வந்த அருணனிடம் ஒரு குட்டியைக் கொடுத்தவள், இன்னுமொரு குட்டியை அவள் தூக்கிக் கொள்ள, மற்ற இரு குட்டிகளும்,முன்னும் பின்னுமாக அவர்களோடு ஒடி வந்தன.வீதியில் கார்ப்பரேஷன் வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்டதும் , குட்டிகள் உரத்த குரலில் பயந்து குரைத்தன.அவைகளை தம் கை வருவதால் ஆறுதல் படுத்திய படி, இவர்கள் தம் வீட்டு வளாகத்தில் நுழைந்தனர்.

 வாசல் வெராண்டாவில் குட்டிகளோடு அருணன் அமர; சாருலதா உள்ளே போய் வட்டிலில் பால் சோறு கலந்து எடுத்து வந்து, அருணன் கையில் கொடுத்தாள்.குட்டிகள் அவனை ஆசையுடன் பார்த்து அவன் அனுமதிக்காக, வாலைக் குழைத்து ஆட்டம் காட்ட; அவன் வட்டிலை கீழே வைத்து'ம்!' என்று குரல் கொடுக்க; குட்டிகள் ஆர்வமுடன் பசியாறின.அளவில்லா வாஞ்சையுடன் சாருலதா நாய்குட்டிகளை அணைத்தவாறு அருணனை, நன்றியுடன் பார்த்தாள்.



சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%