நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்ட சீமான்: வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடெல்லி, அக். 8–
நடிகை பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான பாலியல் புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றதால் வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
தமிழக அரசியல் கட்சிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக நாம் தமிழர் கட்சி இருந்து வருகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். இந்த நிலையில் 2011ம் ஆண்டு சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் பின்னர் தன்னுடைய கர்ப்பத்தை கலைத்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீமான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம், சுப்ரீம் கோர்ட் இரு தரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வர அறிவுறுத்தியது. அடுத்த விசாரணை நடக்கும் வரை, சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், நடிகை விஜயலட்சுமி தரப்பில், "சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதிதான் வேண்டும்" என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மன்னிப்பு கேளுங்கள்
இதனையடுத்து, கடந்த மாதம் 12–ந் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சீமான் செப்டம்பர் 24–ந் தேதிக்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று உத்தரவிட்டனர். மன்னிப்பு கோரத் தவறினால், சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், விஜயலட்சுமியுடன் சுமுகமாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து சீமான் தரப்பில், மன்னிப்பு கோரி ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்னிப்புக் கோரி சீமான் இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தார். இதற்கு சீமான் தரப்பில், "மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளோம்" என்று வாதிடப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த விஜயலட்சுமி தரப்பு, "அந்த அறிக்கையில் நீதிமன்றம் கூறியது போல மன்னிப்பு இல்லை. எனவே அதை ஏற்க முடியாது" என்று தெரிவித்தது.
நீதிபதி எச்சரிக்கை
இந்த வழக்கு கடந்த 12–ந் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியது. மேலும் நீதிபதி நாகரத்னா, "இரு தரப்பும் இதை பேசி முடிக்க வேண்டும். மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்தில்நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது இருக்கும். இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று எச்சரிக்கை விடுத்தார். இரு தரப்புக்கும் மீடியாக்களிடம் பேச, ஆன்லைனில் வீடியோக்கள் பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறது. உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்" என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், சீமான் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியுள்ளது. சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.